உ.பி.யைபோல தமிழக அரசும் விவசாயிகள் கடன்களை ரத்து செய்யலாமே! ராமதாஸ்

சென்னை,

த்தரப்பிரதேச அரசு போல, தமிழக அரசும்,  விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக்கடனை தள்ளுபடி செய்யலாம் என்று கூறியுள்ளார் பா.ம.க. நிறுவனம் ராமதாஸ்.

மேலும், விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்; நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முதல் டெல்லி வரை ஏராளமான விவசாய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஆனால், அவர்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிய வேண்டும் என்ற எண்ணம் கூட அரசுக்கு ஏற்படவில்லை.

பிப்ரவரி மாதம் முதல் முதல்-அமைச்சர் போட்டியிலும், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் மட்டும் தீவிரம் காட்டிய ஆட்சியாளர்களால், உழவர்களின் பிரச்சினைகளை கேட்டறிய ஒரு மணி நேரம் ஒதுக்க முடியவில்லை. இதைவிட மோசமான மனிதநேயமற்ற அரசு இருக்கமுடியாது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த கண்டனத்திற்கு பிறகாவது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண தமிழக அரசு முன்வர வேண்டும். அனைத்துக்கும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள நிலையில், தமிழக விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடனை தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்.

உத்தரப்பிரதேச அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துவிட்டு, அதை ஈடுகட்ட மத்திய அரசின் நிதியுதவியை கோருவதைப் போன்று, தமிழக அரசும் பொதுத்துறை வங்கிக்கடனை தள்ளுபடி செய்துவிட்டு மத்திய அரசின் நிதியுதவியை கோரலாம்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கலாம். இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி உடனடியாக கூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.