சென்னை:

காலியாக உள்ள இடங்களை ஈடுகட்ட, ஓய்வு பெற்ற 1,000 கிராம நிர்வாக அலுவலர்களை (விஏஓ)பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய்த்துறை அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், தற்காலிக அடிப்படையில் ரூ.15 ஆயிரம் மாதச் சம்பளத்தில் காலியாக கிராம நிர்வாக பதவிகளுக்கு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,896 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுபவமும் பணி தொடர்பான நுணுக்கமும் தெரியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 3 கிராமங்களுக்கு ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியாற்றுகிறார்.

வரி வசூலிப்பு, அரசு நலத்திட்ட உதவிகளுக்கு சான்றளித்தல், விவசாயிகளின் பயிர் காப்பிட்டுக்கு உதவுவது போன்ற பணிகளை செய்கின்றனர்.
ஒருவருக்கு 3 கிராமங்களில் பணி என்பதால், பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டே. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதை கவனத்தில் கொண்டே கலெக்டர்கள் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஓராண்டு மட்டுமே சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணியில் இருப்போர் வேறு பணிக்கு செல்லும் நிலையில், ஓய்வு பெற்றவர்கள் தொடர்ந்து பணியாற்ற முன்னுரிமை அளிக்கப்படும்.

இது குறித்து தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் கூறும்போது, டிஎன்பிஎஸ்சி தேர்வு தள்ளிப்போவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

எனினும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தற்காலிகமாக பணியமர்த்தும் முடிவை, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கண்டித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு 5 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருந்தபோது, பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர்களே சமாளித்ததாக இச்சங்கம் தெரிவித்துள்ளது.

ஏராளமான இளைஞர்கள் கிராம நிர்வாக அலுவலர் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, ஓய்வு பெற்றவர்களை நியமிப்பது தவறான முன்னுதாரணம் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூறியுள்ளது.