டில்லி,

மிழக கவர்னராக கடந்த 6ந்தேதி பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால், டில்லி சென்று குடியரசு தலைவர்,  துணைத்தலைவர்  மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சரையும் சந்தித்து பேசினார்.

அப்போது தமிழகத்தில் எழுந்துள்ள அரசியல் சட்ட சிக்கல் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

தமிழக ஆளுநராக பதவி ஏற்றதும் பன்வாரிலால் பேசும்போது,  தான் அரசியல் சார்பின்றி, அரசியல் சட்ட அமைப்புக்கு உட்பட்டு செயல்படுவேன். அரசியல் சட்டத்தை காப்பது எனது முதல் கடமை. அரசியல் சார்புடன் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என்றும், தமிழக அரசின்  செயல்பாட்டை பொறுத்து எனது ஆதரவு இருக்கும். அரசின் நிர்வாகத்தில் முழு அளவில் வெளிப்படை தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 8ந்தேதி கவர்னர் பன்வாரிலால் டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில்,  உள்துறை அமைச்சர்   ராஜ்நாத்சிங்கை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில்   தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் சிறிது நேரம் விவாதித்ததாக கூறப்படுகிறது.

அதையடுத்து, தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீத்தாராமனையும் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த  3 நாட்களாக டில்லியில் முகாமிட்டிருக்கும் கவர்னர் பன்வாரிலால் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பலருடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

வரும் 12, 13ந்தேதிகளில் டில்லியில் மாநில ஆளுநர்கள் மாநாடு டில்லியில் நடைபெற இருக்கிறது. இதிலும் பன்வாரிலால் கலந்துகொள்ள இருப்பதாகவும் அதன்பிறகே தமிழகம் திரும்புவதாகவும் கூறப்படுகிறது.