சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள்இடஒதுகீடு சட்டத்துக்கு கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், தமிழக அரசு அதிரடியாக, அரசாணை வெளியிட்டு, சட்டத்தை அமல்படுத்தியது. இதையடுத்து, வேறுவழியின்றி கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டிய சூழல் எழுந்தது.

அதுபோல, பேரறிவாளன் கருணை மனு விஷயத்திலும், உச்சநீதி மன்றம் கவர்னரின் நடவடிக்கையாக கடுமையாக சாடியிருந்தது. இதன் காரணமாக கவர்னர் பன்வாரிலாலின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டன.

இந்த நிலையில், நேற்று  தமிழக பா.ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது இடஒதுக்கீடு சட்டம் குறித்து பேசியதாக கூறப்பட்டது. இந்த நிலையில்,  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

டெல்லியில், சில நாட்கள் முகாமிடும் கவர்னர், அங்கு  ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து கவர்னர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.