சென்னை: அக்டோபர் 1ந்தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தமிழகஅரசு அனுமதி அளித்து உள்ளது.   அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே மத்தியஅரசு, 9, 10, 11,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்து, அவர்களின் சந்தேகங்களுக்கு  ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது,  அக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் மாணவர்கள் வந்து, பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்டுச் செல்லலாம் என்றும், பள்ளியில் பணியாற்றும் 50 சதவீத ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

10 – 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும்.

10 – 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.  ஒரு நாளில் ஒரு பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளியன்று பள்ளிக்கு வரவழைக்கப்பட்டால், இரண்டாம் பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்து முதல் பிரிவு ஆசிரியர்கள் முதல் இரண்டு நாள்களும், (திங்கள், செவ்வாய்), இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு நாள்களும் (புதன், வியாழன்) பணியாற்ற வேண்டும்.

பிறகு முதல் பிரிவு ஆசிரியர்கள் இரண்டு நாள்களுக்குப் பணியாற்ற வேண்டும்.

10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிகளுக்கு வரலாம்.

ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து செல்லலாம்.

பெற்றோரின் அனுமதி பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.

தேவைப்படின் வழக்கமான ஆன்லைன் வகுப்புகளையும் தொடரலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.