சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதை  கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் அதிரடி அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெலளியாகி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் தீவிரமாகி வருகிறது. சட்டமன்ற தேர்தல் காரணமாக மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் காரணமாக தொற்று பரவல்ர அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  வாக்குப்பதிவு நாளான (ஏப்ரல் 6ந்தேதி) நேற்று  3,645  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 9,07,124 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 12,804 பேர் உயிர் இழந்துள்ளதுடன்,  இதுவரை 8,68,722 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 25,598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிக பட்சமாக  சென்னையில்,  நேற்று ஒரே நாளில் 1,303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,56,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், சிகிச்சை பெற்று வரும் சென்னை நோயாளிகள் எண்ணிக்கை  9,755 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,42,324 ஆக உள்ளது. சென்னையில் இதுவரை 4,280 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 1114 பேரும், தேனாம்பேட்டையில் 1090 பேரும் உள்ளனர். கோடம்பாக்கமும் இராயபுரமும் தலா 940 நோயாளிகளுடன் இடம்பிடித்துள்ளன. திருவிகநகர், அம்பத்தூர் தொகுதிகளில் தலா 800 என்ற அளவில் கொரோனா நோயாளிகள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களில், தற்போது சிகிச்சையிலிருப்போர் விகிதம் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா  அதிகரித்து வரும் நிலையில், விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அதிகாரிகள் மட்டத்திலும் ஆலோசனை நடத்தப்பட்டது.  இதன்  காரணமாக தமிழகத்தில் விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகினற்ன. இந்த நிலையில், ஆனால், பொதுமுடக்கமோ அல்லது ஊரடங்கு குறித்தோ தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி   ஊரடங்கு இருக்காது என்றும் அரசு அளித்த தளர்வுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.