தமிழ்நாடு இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது! மதுரையில் ஆய்வு நடத்தி வரும் முதல்வர் பெருமிதம்…

மதுரை: குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.‘

மேலும்,  முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து ரூ.1295.76 கோடி மதிப்பில் மதுரை மாநகருக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதோடு, ரூ.69.11 கோடி மதிப்பிலான 12 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அத்துடன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

முன்னதாக  ,அரசு விழாவில் கலந்து கொள்ள செல்லும் வழியில், மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார்.

அதையடுதது, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பிலிருந்து மதுரைக்கு முல்லைப் பெரியாறு குடிநீரைக் கொண்டுவரும் ரூ.1,295 கோடி மதிப்புள்ள திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

இன்றைக்கு மதுரை மாநகர மக்களின் நீண்ட காலக் கனவை அம்மாவின் அரசு நனவாக்கியுள்ளது. மக்கள்தொகை பெருகி வருகின்ற இந்தச் சூழ்நிலையில், மதுரை மாநகர மக்களுக்கு தங்குதடையில்லாமல் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தொடர்ந்து அரசுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அம்மாவின் அரசால், சுமார் ரூபாய் 1,296 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கிடைக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம். அம்மாவின் அரசு அறிவிக்கும் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி, மக்கள் மனதில் நிலை பெற்றிருக்கின்றோம்.

76 கூட்டுக் குடிநீர் திட்டம்

தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அம்மா 2011ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, தமிழகம் முழுவதும் மக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீரின் அளவு 4,900 எம்எல்டி ஆகும். அம்மா இருந்தபோதும், அவர் மறைவிற்குப் பிறகு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினம் 7,600 எம்எல்டி குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த ஒன்றரை ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 2,700 எம்எல்டி தண்ணீரை தடையில்லாமல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய துணைக் கண்டத்தில், குறுகிய காலத்தில் இந்தளவு குடிநீர் கொடுத்த வரலாறு கிடையாது. அந்த வரலாற்றைப் படைத்ததும் அம்மாவின் அரசுதான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல 76 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கி படிப்படியாக நிறைவேற்றுகின்றபோது, தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையே இல்லையென்கிற நிலையை உருவாக்குகின்ற அரசாக அம்மாவின் அரசு திகழும்.

நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் வழங்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமார் 40 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு, ரூபாய் 3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இதுவரை 7 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பல ஆண்டு காலமாக குடிநீருக்காக போராடுகின்ற நிலையை மாற்றி, தமிழகம் முழுவதும் நிலையான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டுமென்ற லட்சியத்தை அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தத் திட்டம் 2023ம் ஆண்டில் முழுமையாக நிறைவேற்றப்படும். இத்திட்டத்தின் வாயிலாக சுமார், கூடுதலாக, 1 லட்சத்து 10 ஆயிரம் இணைப்புகள் வழங்கி, மதுரையிலுள்ள 100 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கக்கூடிய நிலையை அம்மாவின் அரசு உருவாக்கி வருகிறது. ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் வாயிலாக மதுரை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

1916ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், இடவசதி போதாமல் உள்ளது என்ற அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அம்மாவின் அரசு கூடுதல் கட்டடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மதுரை, தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார்.

ரூ.167 கோடியில் பஸ் நிலையம் புதுப்பிப்பு

சீர்மிகு திட்டத்தின் கீழ், மதுரை மாநகரத்தில் ரூபாய் 974.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாட்டுத்தாவணி பகுதியில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் பழச்சந்தை, பெரியார் பேருந்து நிலையத்தை ரூபாய் 167 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், புராதானச் சின்னங்கள் மற்றும் தெரு விளக்குகளை ரூபாய் 73 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், மீனாட்சி அம்மன் கோவில் அருகில் சுமார் ரூபாய் 42 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல், மதுரை மாநகருக்கு அழகு சேர்க்கும் விதமாக அதிகமான பூங்காக்கள் என அமைத்துக் கொடுத்திருக்கிறோம். விளக்குத் தூண் மற்றும் பத்துதூண் பகுதிகளை புனரமைத்தல், திருமலை நாயக்கர் மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்துதல், சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையம் அமைத்தல், நான்கு மாசி வீதிகளில் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் சிறப்புச் சாலை அமைத்தல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வைகை வடகரைப் பகுதிகளில் ரூபாய் 276 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை அமைத்தல், தமுக்கம் மைதானத்தில் சுமார் ரூபாய் 47.7 கோடி மதிப்பீட்டில் கலாச்சார மையம் கட்டுதல், பொதுப்பணித் துறை மூலம் சுமார் ரூபாய் 84 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் மற்றும் இரு கரையோரப் பகுதிகளில் தலா சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டுதல், நான்கு வழிச்சாலை மற்றும் பூங்காக்கள் அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக சுமார் ரூபாய் 303 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் இரு கரையோரப் பகுதிகளில் தலா 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டி, நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி நிதியின் கீழ், சுமார் ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ரூபாய் 23.17 கோடி மதிப்பீட்டில் குருவிக்காரன் சாலைப் பகுதியில் பாலம் கட்டப்பட்டு வருகின்றது.

ரூ.544 கோடியில் உயர்மட்ட பாலம்

மதுரை மாநகரில் பாரத்மாலா யோஜனா திட்டத்தின் கீழ் மதுரை செட்டிக்குளம் உயர்மட்டப் பாலம் ரூபாய் 544.23 கோடி மதிப்பீட்டிலும், செட்டிக்குளம் நத்தம் நான்கு வழிச்சாலை ரூபாய் 345.54 கோடி மதிப்பீட்டிலும், மதுரை வெளிவட்டச் சாலை வாடிப்பட்டி முதல் திருமங்கலம் வரை ரூபாய் 493.02 கோடி மதிப்பீட்டிலும், மேலூர் காரைக்குடி நான்கு வழிச்சாலை ரூபாய் 659 கோடி மதிப்பீட்டிலும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாநகரில், தேசிய நெடுஞ்சாலை 49 நீட்சியில் பல்வழி மேம்பாலம் மற்றும் மைய தடுப்புச்சுவர் அமைத்தல் மற்றும் வடிகால் அமைக்கும் பணி ரூபாய் 52.04 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்பொருட்டு, மீனாட்சி மருத்துவமனை முதல் கப்பலூர் வரை ரூபாய் 209 கோடி மதிப்பீட்டில் மதுரை சுற்றுச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் ரூபாய் 55 கோடி மதிப்பீட்டில் காலவாசல் சந்திப்பு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் காரணமாக, விமான நிலையம் அருகேயுள்ள சுற்றுச் சாலையை, விமான ஓடுதளத்திற்கு, சாலை கீழ்ப்பாலமாக அமைக்க ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

ஸ்டாலின் வெளியே வரட்டும்

அம்மாவின் அரசால் நிறைவேற்றப்படும் இத்தனைத் திட்டங்களும் எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை, பார்க்கின்ற பார்வையில் கோளாறா? மனதில் கோளாறா? என்று தெரியவில்லை. இந்தத் திட்டங்களை யாரும் மறைக்க முடியாது. ஆனால், இந்த ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை, இந்த ஆட்சி ஒரு தண்ட ஆட்சி என்று தி.மு.க. தலைவர் சொல்கிறார். அவர் வெளியில் வந்து பார்த்தால்தானே இங்கே நடைபெறுகிற பணிகள் தெரியும். அறையின் உள்ளே அமர்ந்து பார்த்தால் அறைதான் கண்ணுக்குத் தெரியும். எனவே, அறையிலிருந்து வெளியில் வந்து பாருங்கள், மதுரை மாநகரத்தில் நான் அறிவித்த பணிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசு எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. ஒரு அரசு எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது ஒரு அவதூறு செய்தியை சொல்லி, எப்பொழுதும் எங்கள் மீது பழி சுமத்துவதுதான் இவர்களுடைய வாடிக்கை. இவர்கள் என்ன செய்வோம் என்று இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆனால், நாங்கள் செய்ததையும் பாராட்ட மனம் கிடையாது. ஒரு அரசாங்கம் அமைப்பது என்றால், அந்த அரசாங்கத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேறுகிறது என்பதை நாங்கள் புள்ளிவிவரங்களோடு கூறுகிறோம். இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள், அதற்கு நாங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றோம். ஒன்றுமே செய்யவில்லை என்றால், இவை எல்லாம் இந்த மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட திட்டங்கள்.

இன்றைக்குக்கூட, சுமார் 1,296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அடுத்த சந்ததியினருக்கு குடிநீர் பிரச்சினை வரக்கூடாது என்ற அளவிற்கு தொலைநோக்குப் பார்வையோடு இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம்.

இரவு பகல் பாராது உழைக்கிறோம்

இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன, ஏற்கனவே பல கூட்டுக் குடிநீர் திட்டங்களை நான் திறந்து வைத்திருக்கின்றேன். அம்மாவின் அரசைப் பொறுத்தவரை, குடிநீர் பிரச்சனை இருக்கக்கூடாது என்பதைப் பிரதான கொள்கையாகக் கொண்டு எங்கு குடிநீர் பிரச்சனை இருந்தாலும், அந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து விரைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நகரப்பகுதிகளில் மட்டுமன்றி, கிராமப்புற மக்களுக்கும் குழாயின் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொடுக்கின்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

40 லட்சம் குடிநீர் இணைப்புகள் கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ரூபாய் 3,600 கோடி மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து இந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்துக் கொடுக்கின்றோம்.

ஆகவே, எங்கள் அரசைப் பொறுத்தவரை, இரவு, பகல் பாராமல் எங்களுடைய அமைச்சர்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செயலாக்கத்திற்குக் காரணம் துணை முதலமைச்சர். அவர் நிதி அமைச்சராக இருக்கின்றார். எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அதற்கேற்றவாறு நிதியை உருவாக்கி எங்களுக்கு வழங்கிக் கொண்டேயிருக்கின்றார். நான் முதலமைச்சராக இருந்தாலும், துணை முதலமைச்சர் நிதி அமைச்சராக பல ஆண்டுகாலம் அம்மா அமைச்சரவையில் இடம் பெற்று, மிகுந்த அனுபவம் இருப்பதால் இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்கி, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தூணாக விளங்கிக் கொண்டிருக்கிறார் துணை முதலமைச்சர் என்பதை இந்த நேரத்தில் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

விருதுகள் குவிந்தன

அதேபோல, உள்ளாட்சித் துறை அமைச்சரும், அம்மாவின் அரசு அறிவித்த திட்டங்களை செவ்வனே செயல்படுத்தியதன் காரணத்தால், அதிகமான விருதுகளை உள்ளாட்சித் துறையின் மூலமாக நாங்கள் பெற்றிருக்கின்றோம். தேசிய அளவில் அதிக விருதுகளை குவித்த துறை உள்ளாட்சித் துறை. இதுபோன்று, எல்லாத் துறைகளிலும் தேசிய விருதுகளை குவித்த அரசாக எங்களது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய்த் துறை என்று அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கின்றோம்.

கூட்டுறவுத் துறையை எடுத்துக் கொண்டால், ஏழை, எளிய விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வேளாண் பெருமக்களுக்கு கடனுதவி வழங்கும் அரசாக எங்களது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. உரிய காலத்தில் கடனுதவி வழங்குகின்ற காரணத்தால், என்றைக்கும் இல்லாத அளவிற்கு தற்பொழுது டெல்டா பகுதியில் அதிக விளைச்சலை கண்டிருக்கின்றோம். அதேபோல, வருவாய்த் துறையில் தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி ஏழை, எளிய மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற ஒரே அரசாக அம்மாவின் அரசு இருந்து கொண்டிருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை

அம்மாவின் ஆட்சிக்காலத்தில்தான், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். விரைவாக அந்தத் திட்டம் துவங்கவிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையும் மதுரையில் உருவாக்கித் தந்திருக்கின்றோம்.

அதேபோல, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வரலாற்றுச் சிறப்புமிக்க 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கின்றோம். சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் நிலை பற்றி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கிராமப்புறத்தில் படிக்கின்ற மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றார்கள் என்று அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். அப்படி அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற 41 சதவிகிதம் மாணவர்களில் கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலமாக 6 மாணவர்களுக்குத் தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், இந்த 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படித்த 313 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கின்றது. இந்த உள் ஒதுக்கீட்டின் மூலமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 3 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 13 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 10 ஆதிதிராவிட மாணவர்கள், என 26 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கின்றது. சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவை நனவாக்கிய அரசு எங்களுடைய அரசு.

ஸ்டாலின் வசைபாடாத நாளே இல்லை

சிறப்பான சாலைகள் அமைத்துக் கொண்டிருக்கின்றோம், ஏராளமான தடுப்பணைகள் கட்டிக் கொண்டிருக்கின்றோம், நீண்ட காலமாக தூர்வாரப்படாத ஏரிகளெல்லாம் விவசாயப் பிரதிநிதிகளை கொண்டு தூர்வாரி, பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் சேமித்து வைக்கக்கூடிய ஒரு திட்டத்தை எங்களுடைய அரசுதான் உருவாக்கித் தந்திருக்கின்றது. இப்படி பலவேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தலை மையமாக வைத்து எங்களை வசைபாடாத நாளே கிடையாது, அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார். நாங்கள், மக்களை நேரடியாக சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் எவ்வாறு நிலைமை இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு திட்டங்களைத் தீட்டி, மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசாக எங்களுடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆரும், அம்மாவும் கண்ட கனவை அம்மாவின் அரசு நனவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, மதுரை புறநகர் பகுதிகளுக்கும் ஏராளமான திட்டங்களை வாரி வழங்கிய அரசு அம்மாவின் அரசு என்பதைத் தெரிவித்து, மிகச் சிறப்பாக, எழுச்சியாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடன் உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசை குறை கூறுவதையே, தனது நேரத்தை செலவிடுகிறார். அண்மையில் மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளோம். கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் இருந்து வெறும் ஆறு பேர்தான் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி இருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு 313 அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களது மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு சட்டப்போராட்டம் நடத்தி, அந்த உரிமையைப் பெற்றுத்தந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதேபோன்று காவிரி உரிமையை மீட்பதற்கு உரிய சட்டப் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு வடிவமைத்துக் கொடுத்தவரும் ஜெயலலிதா தான்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.