கோவை: தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பெற்ற பெருமைகளை இழந்து வருகிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ள 3 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழகம் வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார் ராகுல் காந்தி. அவர் கூறியதாவது: தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. தமிழகத்திற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இந்தியா தமிழக மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் பல கலாச்சாரங்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள் உள்ளன. ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது.

ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டி உள்ளது. இந்தியாவில் தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார். அனைத்து துறைகளிலும் பெற்றப் பெருமைகளை தற்போது தமிழ்நாடு இழந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

தமிழகத்தில் நீங்கள் விரும்பும் அரசை அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். புதிய தொழில் முனைவோர், விவசாயிகள், மக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியவே தமிழகம் வந்துள்ளேன்.சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்.

விவசாயிகளை தொழிலதிபர்களின் வேலைக்காரர்களாக மோடி மாற்றுகிறார். தொழிலதிபர்களுக்கு அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி விரும்புகிறார். விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதால்தான் காங்கிரஸ் அவர்கள் பக்கம் நிற்கிறது என்று பேசினார்.