சொத்துப்பதிவுக்கே அதிகம்: லஞ்சம் வாங்குவதில் தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா?

டில்லி:

நாடு முழுவதும் லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் மாநிலங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்த ஆய்வில், தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்து தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம்  கொடுப்பதாக கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் அனைத்து விதமான தேவைகளுக்கு லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தனியார் நிறுவனம் ஒன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டது.

ஒருசில வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து,  சுமார் 15 மாநிலங்களில் நடத்தி ஆய்வுகள் மற்றும் கருத்துக் கணிப்பு  முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் லஞ்சம் அதிகமாக வாங்கப்படும் மாநிலங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசம்.

இங்கு சொத்துப்பதிவு, வரித்துறை, போக்குவரத்து, மின்சாரத்துறை போன்றவைகளில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடைபெறுவதாக 59 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலமான  பஞ்சாப் மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இங்கு  56 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே தங்களுக்கு வேலைகள் முடித்துத் தரப்படுவதாக கூறியுள்ளனர். பஞ்சாப்பில் போலீசாருக்கு தான் அதிகம் லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து 3வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.  லஞ்சம் கொடுப்பதிலும், வாங்குவதிலும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சொத்துப்பதிவுக்கு தான் அதிகம் லஞ்சம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது ஆன்லைன் முறையில் சொத்துப்பதிவுகள் செய்யப்பட்டாலும், லஞ்சம் பெறுவது மட்டும் குறையவில்லை என்றும், ஏற்கனவே உள்ளதைவிட அதிகரித்து வருவதாகவே  கூறப்படுகிறது.

மொத்தத்தில் இந்த கருத்துக்கணிப்பின்படி, நாடு முழுவதும் சொத்துப்பதிவுக்காக லஞ்சம் வாங்குவது பலமடங்கு அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 27 சதவிகிதமாக இருந்த லஞ்சம் தற்போது 30 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.

அதேவேளையில், போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது கடந்த  2017ம் ஆண்டு  காவல்துறையினர் லஞ்சம் பெறுவது 30 சதவீதமாக இருந்தது. அது தற்போது 5 சதவிகிதம் குறைந்து  25 சதவீதமாக  இருக்கிறது.

ஆனால் சொத்து பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் எண்ணிக்கை 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்து இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.