Random image

கேரள வெள்ளத்துக்கு தமிழ்நாடு காரணமல்ல!: பினராயி விஜயன் பொய்யை அம்பலப்படுத்தியது மத்திய நீர்வளத்துறை

கேரள வெள்ளத்துக்கு தமிழ்நாடுதான் காரணம் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறிவந்த பொய்யை மத்திய நீர்வளத்துறையும் அம்பலப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரள மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. பல மாவட்டங்கள் நீரில் மூழ்கின. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து, முகாம்களில் தஞ்சமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். இந்த நிலையில், கேரள வெள்ளத்துக்குக் காரணம் தமிழ்நாடு அரசுதான் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

அதாவது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை உரிய நேரத்தில் திறந்துவிட கோரிக்கைவைத்தும் தமிழ்நாடு அரசு செவிமெடுக்காததால்தான் வெள்ளம் ஏற்பட்டது என்றார். ஆனால் அவர் கூறியது பொய் என்பதை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதாரத்துடன் மறுத்தார்.

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின்போதும் தமிழ்நாடு அரசு இதை தெளிவாக தெரிவித்தது. இந்த நிலையில் மத்திய ஆணையமும், “வெள்ளத்துக்குக் காரணம் முல்லைப்பெரியாறு அல்ல” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நீர்வளத்துறைக்கு மத்திய நீர் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில், “சரியான நேரத்திற்கு முல்லைப்பெரியாறு அணை திறக்கப்படவில்லை என்பதும், அதனால்தான் வெள்ளம் ஏற்பட்டது என்பதும் தவறானது” என்று குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் கேரள முதல்வர் பினராயி கூறிவந்த பொய்யை மத்திய நீர்வளத்துறையும் அம்பலப்படுத்தியுள்ளது.