நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு மாநிலம் தமிழகம்தான்: சட்டமன்றத்தில் முதல்வர் தகவல்

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வந்தது. விவாதங்கள் முடிவடைந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலுரை ஆற்றினார்.

நேற்றும், இன்றும்  காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கையின் போது உறுப்பினர்கள்  எழுப்பிய கேள்விகளுக்கு காவல்துறை பொறுப்பு வகிக்கும முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  நீண்ட  பதில் அளித்தார்.

அப்போது, நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலங்களில் முதன்மையானது தமிழகம்தான் என்றும்,  தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கை பராமரிப்பதில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.   மேலும் அவர் பேசியதாவது,

தமிழக காவல்துறை பிற மாநில காவல்துறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருகின்றன.

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள முதல் மாநிலம் தமிழகம்தான். பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் குற்றங்களின் விகிதம் குறைவாக உள்ளதாகக் கூறிய அவர், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், நீதிமன்றத்தில் நிறுத்துவதிலும் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். . குற்றவழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் விகிதமும் அதிகரித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிகக் குறைவாக உள்ளதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரம் மூலம் தெரியவருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

தொடர் கண்காணிப்புகள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் ஊடுருவல் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளதாக வும் அவர் தெரிவித்தார். மூளைச்சலைவை மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் தமிழக இளைஞர்கள் இணைவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா? என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்கவும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று சிலர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் தவறான வதந்தி பரப்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என்பதை நாடே அறியும்.

தமிழகத்தில்  சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. போலீசார் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது.

நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.8.5 கோடியில் ரோந்து வாகனம் வாங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படைக்கு சலுகைகள் அளிப்பது குறித்து பரிசீலனையில் உள்ளது. அனைத்து கோவில்களிலும் தீயணைப்பு கருவிகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தீயணைப்புத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தீயணைப்பு மற்றும் கட்டிட பராமரிப்புப் பணிக்காக கூடுதலாக 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைப் பணியாளர்களுக்கு நீள்பணி சிறப்பூதியம் திருத்தி வழங்கப்படும்/

6 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில், காஞ்சிபுரம் மாவட்டம் மகேந்திரா வேர்ல்டு சிட்டி, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, சேலம் மாவட்டம் கருமந்துறை, நங்கவள்ளி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, தல்லாகுளம், திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்க ளுக்கும், சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் புதியதாக அமைக்கப்படவுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலையத்திற்கும் மொத்தம் 7 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்பன உள்ளிட்ட 23 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

30 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நலவாரியம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். தடய அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் 2 பேருக்கு இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சரின் விருது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.