சென்னை: மொழியின் பெயரை கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்; திருவள்ளுவரின் மண்ணுக்கு வந்துள்ளது பெருமை” என பதவி ஏற்பு விழாவில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நெகிழ்ச்சியுடன் புகழாரம் சூட்டினார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஏ.பி.சாஹி கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதியுடன் ஓய்வுபெற்றார். இதையடுத்து. உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின் பேரில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழகம் வந்த சஞ்சிப் பானர்ஜிக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  இன்று சென்னை கிண்டி  ராஜ்பவனில் நடைபெற்ற  நடைபெற்ற நிகழ்ச்சியில்  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சிப்பானர்ஜி பதவி ஏற்றார்.

நிகழ்ச்சியின் போது பேசிய தலைமைநீதிபதி சஞ்சீப் பானர்ஜி, “நம் நாட்டிலேயே மொழியின் பெயரைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று புகழாரம் சூட்டியதுடன்,  வள்ளுவரின் மண்ணுக்கு வந்திருப்பதில் பெருமை அடைகிறேன். தமிழகத்தை என்னுடைய மற்றொரு தாய்வீடாக உணர்கிறேன். முதலில் நான் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி, அதன் பிறகு தான் தலைமை நீதிபதியாக பணியாற்றுவேன்” என்று உணர்ச்சி வசமாக  நெகிழ்ச்சியுடன் பேசினார்.