சென்னை:

ரபரப்பான சூழலில் இன்று தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் துவங்குகிறது.

சட்டமன்ற ரபுப்படி, இன்றைய கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதற்காக, காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வரும் அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்பார்கள்.

சட்டசபைக்குள் ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும். சபாநாயகர் இருக்கைக்கு வரும் அவர், சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு வணக்கம் செலுத்துவார்.  அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்.

அதன்பிறகு, 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த துவங்குவார். அவரது உரையில் அரசின் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இடம்பெறும். அவரது சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற பின், அவர் சட்டசபையில் உரை நிகழ்த்துவது இதுவே முதல் முறை.

அவரது  உரை முடித்ததும், அவரது உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். இவை அனைத்தும் மதியம் 12 மணிக்குள் நிறைவடையும்.  அத்துடன் இன்றைய கூட்டம் முடிவடையும்.

சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்தும் போது தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பக்கூடும் என்று கூறப்படுகிறது.

பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆளுநர் தொடர்ந்து ஆய்வுகளில் இறங்குவது,  ‘நீட்’ தேர்வு, ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம், உள்ளாட்சி வார்டு தொகுதிகள் மறுவரையறை குளறுபடி, ‘ஒக்கி’ புயல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து,  விவாதங்களைக் கிளப்ப எதிர்கட்சிகளான, தி.மு.க., – காங்கிரஸ் திட்டமிட்டுள்ளன.  ஆகவே பரபரப்பான நிலையில் இன்று சட்டசபை கூடுகிறது.

மதியத்திற்கு பிறகு, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் தனது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்துவார். இதில்  சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்வது? என்று முடிவு செய்யப்படும்.

12-ந் தேதி வரை 4 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று யூகச் செய்தி உலவுகிறது.