இரங்கல் தீர்மானத்துடன் சுமார் அரைமணி நேரத்தில் முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டம்! நாளைக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று, கலைவாணர் அரங்கத்தில் கூடியது. அவை கூடியதும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றம், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, சபை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கொரோனா முடக்கம் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கு பிறகு இன்று தமிழக சட்டமன்றம் கூடியது.  வழக்கமாக தலைமைச் செயலகத்தில் நடைபெறும்  சட்டமன்ற சபைக்கூட்டம், இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால்,  கலைவாணர் அரங்கத்தின் 3வது மாடியில், கூடியது.

இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி முதலமைச்சா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரும் செல்வதற்கு தனித்தனியாக வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்றைய கூட்டத்திற்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் முகக்கவசம் அணிந்து பேரவையில் பங்கேற்றனர்.

தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. அதையடுத்து, சபாநாயகர் தனபால்,  மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்பி வசந்த்குமார், திமுக ஜெ,அன்பழகன், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி கோபாலன், கு.லாரன்ஸ், ஜெமினி கே,ராமச்சந்திரன், மு.ஜான் வின்சென்ட், ஜி.காளான் உட்பட 23 பேரின் மறைவிற்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. மேலும், கொரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, இரங்கல் தீர்மானம் நினைவேற்றப் பட்டது.

இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தை பேரவைத் தலைவர் தனபால் நாளைக்கு ஒத்திவைத்தார்.  நாளை காலை 10 மணிக்கு 2ஆம் நாள் அவை கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

3 நாள் நடைபெறும் அறிவிக்கப்பட்ட இன்றைய கூட்டத்தொடர் அரை மணி நேரத்திற்குள் முடிவடைந் தது. இன்னும் 2 நாட்கள் சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இன்றைய கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்,  நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரும் வாசகம் அடங்கிய முகக்கவசத்தை அணிந்தபடி  பேரவைக் கூடடத்தில் பங்கேற்றனர்.