மேகதாது அணை விவகாரம்: நாளை தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம்

சென்னை:

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள விவகாரம் தமிழத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக சட்ட மன்ற சிறப்புக்கூட்டம் நாளை கூடுகிறது.

இதற்கான அறிவிப்பை கவர்னர் பன்வாரிலால் புரோகித்து வெளியிட்டுள்ளார்.  சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

கர்நாடகாவில் இருந்து காவிரி ஆறு மூலம் தமிழகத்தின் டெல்டா பாசனத்துக்கு காவிரி நீர் வந்துகொண்டுள்ளது. இதை தடுக்கும் நோக்கில், மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காf ரூ.5,912 கோடி செலவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு மத்திய நீர்வளத்துறையும் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே காவிரி விவகாரத்தில் கர்நாடகா எந்தவொரு நடவடிக்கை எடுக்க வேண்டுமானாலும் தமிழக அரசின் அனுமதி தேவை என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ள நிலையில், அதை மதிக்காமல் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அனுமதி வழங்கி இருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளார்.  மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று திருச்சியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தி வந்தது.

இதுதொடர்பாக பேரவைத் தலைவர் ப.தனபால், முதல்வர் பழனிசாமி ஆகியோரை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பேரவையைக் கூட்டுமாறு மனு கொடுத்தனர்.

இந்நிலையில் மேகேதாட்டு அணை விவகாரம் பற்றி விவாதிப் பதற்காக தமிழக சட்டப்பேரவை யின் சிறப்புக் கூட்டம் அவசர மாகக் கூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் கே.சீனிவாசன்  வெளியிட்டுள்ள  அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூட்டியுள்ளார்.  வியாழக்கிழமை (நாளை) மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்தும், மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.