சென்னை,

ரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர்களை சந்திக்க தமிழக  அமைச்சர்கள் இன்று காலை டில்லி பயணம் மேற்கொண்டனர்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்ததால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்ன மான இரட்டை இலை முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தலின்போது, ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் தாங்கள் தான் உண்மையான அதிமுக, தங்களுக்கே இரட்டை இலை ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால், தேர்தல் கமிஷன் இரட்டை இலையை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கி வைத்தது. அதைத்தொடர்ந்து இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என பிரம்மான பத்திரங்கள் தாக்கல் செய்தன.

இந்நிலையில், சமீபத்தில் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது. அதைத்தொடர்ந்து அதிமுக செயற்குழு பொதுக்குழு கூடியது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்படி, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்து தேர்தல் கமிஷனிடம் விளக்கி அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கவும், ஏற்கனவே இரு அணிகள் சார்பாக கொடுக்கப்பட்ட பிரம்மான பத்திரங்களை வாபஸ் பெறவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்க தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதய குமார், கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர்  டில்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்குள் இரட்டை இலையை மீட்க எடப்பாடி தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது சம்பந்தமாக மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.