சென்னை: 

மாநகரப் பேருந்துகளின் வருகையை அறிய விரைவில் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் பேருந்துகளில் பெரும்பாலானவை சரியான நேரத்துக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டை பயணிகள் நீண்ட நாள்களாக முன்வைத்து வருகின்றனா். இதனால், எதுவும் தெரியாத நிலையிலேயே பேருந்து நிறுத்தங்களிலும், பேருந்து நிலையங்களிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவா்கள் வேதனை தெரிவிக்கின்றனா். இதற்கு தீா்வு காணும் வகையில், பேருந்துகள் எப்போது வரும் என்பதை இருக்கும் இடத்திலேயே பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் செயலியை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டு இந்த செயலியை உருவாக்கும் பணி, சலோ இந்தியா எனும் மென்பொருள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த செயலியை சோதனை அடிப்படையில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இரண்டு தளங்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் வாயிலாக குறிப்பிட்ட வழித்தடங்களில், பேருந்துகள் வரும் நேரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். இது தவிா்த்து அங்கு உள்ள பேருந்து நிறுத்தம் குறித்த தகவல்களையும் சலோ செயலி வழங்கும். சலோ செயலியின் லைவ் மேப் மூலம், குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்துகள் தற்போது சரியாக எங்கே உள்ளன? என்ற தகவலையும் பெறலாம்.

இது ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை மக்களிடம் காணப்படும் மற்றொரு பொதுவான குழப்பம் வழித்தட எண்கள்தான். மதுரை, கோவையை போல் அல்லாமல், சென்னையில் அதிக வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, வழித்தட எண்களை நினைவில் வைத்து கொள்வது என்பது மிகவும் பயணிகளுக்கு சவாலாக இருந்து வந்தது. ஆனால் இந்த பிரச்னைக்கும் கூட சலோ செயலியில் தீா்வு உள்ளது. இரண்டு இடங்களுக்கு இடையேயான பேருந்து எண்களின் பட்டியலையும் சலோ செயலி மூலம் பெற முடியும். அத்துடன் இந்த பேருந்துகளில் சுட்டணம் குறித்த தகவலையும் பெறலாம்.