சென்னை:

தமிழகத்தில் நாளை நடக்கும் வேலை நிறுத்த போராட்டம் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது

டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாளை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஆட்டோ, வர்த்தகம், லாரி, பஸ் உரிமையாளர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் நாளை அத்தியாவசிய பணிகள் அனைத்தும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியள்ளது.

இந்த போராட்டத்தின் மூலம், கடந்த 140 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள விவசாயிகளின் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி தீர்வு காண வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. இந்த போராட்டத்திற்கு இ.கம்யூ, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆதரவ தெரிவித்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் ஆட்டோ, லாரி, பஸ் போக்குவரத்து மற்றும் கடைகள் முடங்குள் நிலை உருவாகியுள்ளது.

ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணி கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் 2.45 லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. சென்னையில் மட்டும் 73 ஆயிரம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் எதிரே நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் 25 ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொள்கின்றனர்’’ என்றார்.

அதேபோல் ‘‘20 ஆயிரம் பஸ்கள் நாளை ஓடாது என்று அறிவிக்கப்பட்டதள்ளது. நாளை 70 சதவீத அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு வரமாட்டார்கள். 100 பஸ்கள் மட்டுமே இயங்கும் வாய்ப்பு உள்ளது’’ என்று சிஐடியு தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்தார்.

‘‘காய்கறிகள் ஏற்றிச் செல்லும் 4.5 லட்சம் லாரிகள், கட்டுமான பொருட்கள், இரும்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்காது’’ என்று லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்காக இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக லாரி உரிமையாளர்கள் கூட்டம¬ப்பு தெரிவித்துள்ளது. கட்டுமான பொருட்கள், ஜல்லி கற்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் 55 லட்சம் லாரிகள் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்காது. லாரிகள் வேலை நிறுத்தம், வர்த்தக நிறுவனங்கள் கடையடைப்பு போன்ற காரணங்களால் நாளை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘‘மாநில முழுவதும் 21 லட்சம் உறுப்பினர்கள், சென்னையில் மட்டும் 5 லட்சம் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கடையடைப்பு நடத்தவுள்ளார்கள்’’ என்று தமிழ்நாடு வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

அதேபோல வணிகர் சங்கங்களின் பேரவையும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் கீழ் 6 ஆயிரம் சங்கங்கள் உள்ளது. இதன் மூலம் 60 லட்சம் கடைகள் நாளை தமிழகம் முழுவதும் பூட்டப்பட்டிருக்கும். மெடிக்கல் முதல் காய்கறி கடைகள் வரை நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.