திருச்சி:

புதுக்கோட்டை மாவட்டத்தில்  கொளத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த 69 ஆண்டுகள் பழமை யான பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட நிலையில், கிராமப்பெரியவர்களின் முயற்சி காரணமாக மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இல்லாததால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் மூடப்பட்ட பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி, நூலகமாக மாற்றப்படும் என அரசு அறிவித்தது. இதையறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

1950ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்கள் பள்ளியின் நினைவுகளை அசைபோட்ட அந்த  கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடி  பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினர்.

மீண்டும் திறக்கப்பட உள்ள 69ஆண்டு கால பழமையான தொடக்கப்  பள்ளி

தொடர்ந்து, 69 ஆண்டு பழமையான இந்த பள்ளி மூடப்படுவதை விரும்பாத அவர்கள், கிராமத் தினரை ஒருங்கிணைத்து ஒரு குழுவை ஏற்படுத்தி, தனியார் பள்ளிகளில் படித்து வரும் அந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்களை மீண்டும் அரசு பள்ளிக்கே வரவழைத்தனர்.

இதன் காரணமாக சுமார் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு திரும்பினர். மேலும், அறந்தங்கி தாலுகாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மீண்டும் பள்ளி நடைபெற மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் காரணமாக அந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில், பள்ளியைத் திறக்க இந்த மாணவர்கள் போதுமானது என்று கிராமத் தலைவர் டி.துரைராஜ் தெரிவித்துஉள்ளார். மேலும் 69 ஆண்டுகால பழமையான பள்ளி மூடப்படுவது தங்களின் கவுரவப் பிரச்சினை என்று கூறிய கிராமவாசிகள், இதை நாங்கள் முன்பே செய்திருக்க வேண்டும் என்று வருத்தப்பட்டனர்.

தற்போது மாணவர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ள நிலையில், பள்ளியைத் திறக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி விஜயலட்சுமியை சந்தித்து வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து பள்ளியை மீண்டும் திறக்க பள்ளி கல்வி இயக்குநரிடம் வலியுறுத்தப்படும் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி விஜயலட்சுமி தெரிவித்தார்.