சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் மள்ளுக்கட்டு நடந்து வருகிறது. இதில் ஏற்பட்ட பிளவில் பாஜ குளிர்காய்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. வெளிப்படையாகவே ஓ.பன்னீர்செல்வத்தை பாஜ ஆதரிப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தது. இது வேறு யாருமல்ல. சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தான் இந்த குற்றச்சாட்டை சுமத்தி வந்தனர்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு பின்னால் பாஜ இருப்பதாக நாஞ்சில் சம்பவ் கருத்து தெரிவித்திருந்தார். இரட்டை இலையை பன்னீர்செல்வத்திற்கு பெற்று தருவதற்காகவே பாஜ இப்படி நடப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்படும் பாஜ.வை எதிர்கொள்ள எடப்பாடி அணி புதிய யுக்தியை கையாள தொடங்கியுள்ளது. பாஜ.வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸூடன் எடப்பாடி அணி கைகோர்த்துள்ளது.

அனைவரைது புருவத்தையும் உயரச் செய்யும் வகையில் தர்மபுரியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடந்த தூய்மைப் பணியை எடப்பாடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சரான கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்துள்ளார். தர்மபுரியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமின் ஒரு கட்டமாக நடக்கும் இந்த தூய்மை இயக்கத்தை பேருந்து நிலையத்தில் அன்பழகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மே மாதத்தில் ஆர்எஸ்எஸ் நாடு முழுவதும் பயிற்சி முகாமை நடத்துகிறது. அன்பழகன் தொடங்கி வைத்த புகைப்படத்தை ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான விஷ்வ சம்வத் கேந்திரா சார்பில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.