சென்னை:

தமிழகத்தில் இந்த ஆட்சி 2 மாதங்கள் கூட இருக்காது என ஆர்.கே.,நகரில் வெற்றி பெற்ற தினகரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்த பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றி சான்றிதழை சுயேட்சை வேட்பாளர் தினகரன் பெற்றார். நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடை தேர்ததலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு 89,013 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர்மதுசூதனன் மட்டுமே டெபாசிட் பெற்றார். வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் பிரவீன்நாயரிடம் இருந்து தினகரன் பெற்றுக்கொண்டா். ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற ராணி மேரி கல்லூரியில் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழை பெற்ற தினகரனுடன் தங்கதமிழ்செல்வன், செந்தில்பாலாஜி உடன் இருந்தனர்.

சான்றிதழை பெற்ற பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ வெற்றி பெற காரணமாக இருந்த தொண்டர்களுக்கு நன்றி . இன்னும் 2 மாதம் கூட இந்த ஆட்சி இருக்காது. வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி. மக்கள் விரோத காட்சியை முடிவுக்கு கொண்டுவர அதற்கு அச்சாரமாக வெற்றி கிடைத்திருக்கிறது.

காவல்துறை செயல்பாடு கண்டனத்திற்குரியது. இனிமேல் மாற்றங்கள் நிகழும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள். ஜெயலலிதாவின் ஆசிபெற்ற என்னை ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். மக்கள் கணிப்பு என்னை இடைத்தேர்தலில் வெற்றிபெற வைத்துள்ளது. ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை தொடர்வேன்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘காவல்துறையினர் ஏவல் துறையாக இருக்க கூடாது. நான் இன்று முளைத்த காளான் அல்ல. நான் அகங்காரத்தில் பேச வில்லை. மக்களின் நாடி துடிப்பு எனக்கு தெரியும். 60 சதவீத வாக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். சில காரணங்களால் 50 சதவீதம் கிடைத்துள்ளது. ஆர்.கே. தொகுதியில் இருப்பவர்கள் சாமானியர்கள்.

அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். நான் முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் முடிவுஎடுக்க மாட்டேன். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வில்லை. ஸ்லீப்பர் செல்கள் வெளியில் வருவார்கள். சசிகலாவை சந்தித்து ஆசீர் வாதம் வாங்க இருக்கிறேன்’’ என்றார்.