சென்னை:

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை தமிழகத்தையும் கடுமையாக தாக்கி உள்ளது. இதன்  காரணமாக,  புதிய சொத்துக்களை பதிவு செய்வது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கணிசமாக குறைந்துள்ளது என்று பதிவுத்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறை  மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது இதன் காரணமாக,  தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை உயர்த்தியது. ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி அரசு அமல்படுத்திய பண மதிப்பிழப்பு,  ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் பணப் பரிமாற்றம், விளை நிலங்கள், மனைகளாக மாற்றக்கூடாது  போன்ற அறிவிப்புகளால்,  ரியல் எஸ்டேட் துறை கடுமையான சரிவை  சந்தித்து உள்ளது.

தற்போது நாடு வரலாறு காணாத அளவில் பொருளதார சரிவை சந்தித்து வரும் நிலையில், ரியல் எஸ்டேட் துறை மட்டுமல்லாது ஆட்டோமொபைல் துறை உள்பட பல தொழில்துறைகள் கடுமையான நிதிநெருக்கடியில், தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் வருவாய் வசூலிப்பு மற்றும் பத்திரப்பதிவு ஆகியவையும் கணிசமாக குறைந்துள்ள தாக கூறப்படுகிறது.

கடந்த 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத காலத்தில் 10 லட்சத்து 67 ஆயிரத்து 881 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டான 2019-20 நிதியாண்டின் இந்த 5 மாத காலத்தில் 10 லட்சத்து 45 ஆயிரத்து 597 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது 2 புள்ளி ஜிரோ 3 சதவீதம் குறைவு ஆகும்.

அதேபோல், 2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 4 ஆயிரத்து 483 புள்ளி 98 கோடி ரூபாய் வருவாய் வசூலிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இந்த தொகை 4 ஆயிரத்து 407 புள்ளி 52 கோடியாக குறைந்துள்ளது. இது ஒன்று புள்ளி 92 சதவீதம் வீழ்ச்சியாகும்.