பூந்தமலிலி: வடமாநிலங்களைப்போல தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடக்கூடாது; எச்சரிக்கையாக இருங்கள், தேர்தலில்’பாஜகவுக்குச் செலுத்தும் வாக்கு 100 ஆண்டுகால சரித்திரத்தை மறந்துவிட்டுப் போடுகின்ற வாக்கு என மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்  கூறினார்.

ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் செல்வப்பெருந்தகையை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய  முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்  “தமிழ்நாட்டில் தேர்தல் வந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கைச்சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். வாக்களிக்க வேண்டும் எனக் கேட்க வந்துள்ளேன்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. நான் கேள்விப்பட்டது கிடையாது. கூவத்தூரில் சேர்ந்தார்கள் முதலமைச்சராக வந்துவிட்டார். தேர்தல் நேரத்தில் என்ன செய்தோம் என்று கூறிவிட்டு ஆளும் கட்சி வாக்குச் சேகரிக்க வேண்டும். எதிர்க்கட்சி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறி வாக்குச் சேகரிக்கின்றனர்.

சனாதன தர்மம் தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது. பாஜகவிற்குச் செலுத்தும் வாக்கு 100 ஆண்டுகள் சரித்திரத்தை மறந்துவிட்டு போடுகின்ற வாக்கு. நிதி ஆதாரத்தை நம்மால் தேட முடியும். நிதி ஆதாரமும், நிர்வாகத் திறமையும் கூடி வரும்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டுக்கு, தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பவர்கள்தான் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களாக இருப்பார்கள். தமிழ் மீது இந்தி என்ற குரங்கு வந்து அமர்ந்துவிடும். வட நாடு கலவர பூமியாக மாறி உள்ளது. தமிழ்நாடு கலவர பூமியாக மாறக்கூடாது என்பதற்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”.

பாஜகவின் பல்லக்கை சுமந்த அதிமுகவை நிராகரிக்க வேண்டும். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைய தேவையான கொள்கைகளும், தலைமையும் உள்ள கட்சி திமுகதான். இலங்கைத் தமிழருக்காக தமிழர்களே வாழாத நாடுகள் கூட ஐ.நா.வில் குரல் கொடுக்கின்றனர். ஐ.நா. சபையில் இலங்கைக்கு  எதிராக 22 நாடுகள் வாக்களித்தன. இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது வெட்கக் கேடானது என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.