சென்னை
காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெறும் ரெயில் மறியல் காரணமாக மின்சாரம் ரெயில்கள் தாமதம், பஸ்களும் மறியல் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல் காரணமாக அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. அதன் காரணமாக தமிழகத்திலிருந்து சென்ற பஸ்கள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது
சென்னை சைதாப்பேட்டையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கைது
சென்னை அண்ணா சாலையில் நடு ரோட்டில் அமர்ந்து  திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதானார்கள். நடு ரோட்டில் அமர்ந்து கனிமொழி உள்ளிட்ட மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
திருச்சி ரெயில்வே சந்திப்பில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது
சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தம்
தஞ்சை ரயில் நிலையத்தில் மறியல் செய்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் சடையார் கோயிலில் கொடும்பாவி எரித்து சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே பேட்டை ரயில் நிலையத்தில் செங்கோட்டை பயணிகள் ரயிலை மறிக்க முயன்ற  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் எம்.எல்.ஏ உதயசூரியன், திமுக மாவட்ட செயலாளர் அங்கையர்கண்ணி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையிலான திமுகவினர் கர்நாடகத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே போலீஸ் தடுத்து நிறுத்தியதால் சாலையிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லில் ரெயில் மறியல்: முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி- தி.மு.க.வினர் 1000 பேர் கைது. இதனையடுத்து பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினர் கைது
வேலூர் காட்பாடியில் பிருந்தாவனம் ரெயிலை மறித்த துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் கைது

 
தி.மு.க. சார்பில் ஓசூர் ரெயில் நிலையத்தில் மறியல் செய்ய தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் தலைமையில் போலீசார் மறித்து கைது செய்தனர்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ்(தளி), முருகன்(வேப்பனப்பள்ளி) மற்றும் ஓசூர் நகர தி.மு.க. செயலாளர் மாதேஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்யா உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி செயலாளர் செந்தமிழ் தலைமையில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் ரெயில் நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் விடுதலை களம் சார்பில் அதன் நிர்வாகிகள் ரெயிலை மறிக்க முயன்றனர்.அப்போது, அவர்கள் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள். உடனே போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.