தமிழகம் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது… 50% அளவில் பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஸ்டிரைக்  நள்ளிரவு முதல் தொடங்கிய நிலையில், சில இடங்களைத் தவிர்த்து பல இடங்களில் சுமார் 50 சதவிகித அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கொரோனா விதிமுறைகளை மீறி பேருந்துக்களில் மக்கள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

14-வது ஊதிய ஒப்பந்தத்தப்படி, ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் உள்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழு வதும் தொமுச, சிஐடியு உள்பட  11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக உள்பட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கத்தின் பேருந்துகளை இயக்க முன்வராத நிலையில்,  அதிமுக, பாமக, தேமுதிக ஆதரவு தொழிற்சங்க ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு வந்துள்ளனர். இதனால் சுமார் 50 சதவிகிதம் அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் ஓரளவு பேருந்துகள் இயங்கி வருவதால், மாநகர பேருந்து சேவை பெரியளவில் பாதிக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர்..

திருச்சி, மதுரை, கோவை, நெல்லை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்துகள்  காலையில் இயக்கப்படாத நிலையில், தற்போது சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக வறப்படுகிறது. எதுவும் ஓடவில்லை. அதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் 40 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மதுரையில் 30%, சேலத்தில் 60 சதவீதம், பல்வேறு பகுதிகளில் 50 சதவீத அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.