சென்னை:

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கிண்டி அருகே பரங்கிமலை பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்க ளுக்கு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போதை மாத்திரை விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட வந்தது. இதையடுத்து,  ஆலந்தூர் பகுதியில்  பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்கப்படவதாகவும் புகார் வந்தது. இந்த நிலையில், பரங்கிமலை நசரத்புரம் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை மடக்கிய காவல்துறை யினர்,  அவர்களிடம் இருந்து  48 போதை மாத்திரைகள், 8 கஞ்சா பொட்டலங்கள்  மற்றும், ரூ.25,000 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடம் நடத்தப்பட்ட அதிரடி, விசாரணையில் அவர்கள் இருவரும் பரங்கிமலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த காமேஷ் மற்றும் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த சீனாத் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்துள்ளனர். மேலும் ஒரு மாத்திரையின் விலை ரூ.300-க்கு விற்று வந்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 5 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் பின்னணியில் உள்ள கும்பல் குறித்தும் தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.