புதுடெல்லி:
மிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தல் மூலம் 6 பேரும், நியமனம் மூலம் 4 பேரும் உறுப்பினர்கள் ஆனார்கள். பார் கவுன்சில் உறுப்பினர்கள் இல்லாததால், இரு மூத்த வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

நியமன உறுப்பினர்களை விட தேர்வான உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்ற விதிப்படி இல்லாததால், வாரியத்தை கலைத்து 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், நிதித்துறை செலவின செயலர் சித்திக் என்பவரை வாரியத்தின் சிறப்பு அதிகாரியாகவும் நியமித்தது.

முத்தவல்லிகள் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்காக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள முத்தவல்லிகளின் பட்டியலை அனுப்பும்படி மண்டல கண்காணிப்பார்களுக்கும், செயல் அதிகாரிகளுக்கும் தலைமை செயல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார். தமிழக சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வக்பு வாரியம் கலைக்கப்பட்ட அரசாணையையும், முத்தவல்லிகள் பட்டியலை கேட்கும் கடித போக்குவரத்துகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை இராயப்பேட்டையை சேர்ந்த எஸ்.சையது அலி அக்பர் என்ற வக்பு வாரிய உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதுதொடர்பாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு, இடைக்கால தடை விதித்தது. மேலும், தமிழக அரசின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க எதிர்மனுதாரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.