எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு: சிபிஐ விசாரணை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்

டில்லி:

முதல்வர் எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில்  உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக திமுக தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உள்ள நிலையில், அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட் டிருந்தது..

இந்த நிலையில், திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் கடந்த வாரம் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  முதல்வருக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று திமுக தரப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  முதலமைச்சருக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்சநீதி மன்றத்தில் மேல்முறை மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை  நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என்று தெரிவித்து உள்ளது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தமிழக முதல்வர்மீது ஊழல் புகார் லஞ்ச ஒழிப்பு துறை யிடம் புகார் மனு கொடுத்திருந்தார். அதில், முதல் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது சம்பந்தி பி.சுப்பிர மணியம், நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோருக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.4,833.57 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளார்.

இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. பொது ஊழியரான எடப்பாடி பழனிசாமி ஆதாயம் அடையும் நோக்கில் இதுபோன்று செயல்பட்டுள்ளார். எனவே, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீதும், தொடர்புடைய மற்றவர்கள் மீதும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தார்.அ இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக  கேள்வி எழுப்பியது. மேலும் டெண்டர் தொடர்பான ஆவனங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. முதல் எடப்பாடி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து  தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின் அறிக்கையை ஏற்க மறுத்து  வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக உயர்நீதி மன்றம் அதிரடியாக அறிவித்தது.

மேலும், லஞ்ச ஒழிப்புதுறை இது தொடர்பாக ஆவனங்களை சிபிஐயிடம் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும், சிபிஐ, இதுகுறித்து  3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசா ரணையை சிபிஐ முடிக்க வேண்டும் என்றும்,  ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதி மன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.