தமிழக தண்ணீர் பஞ்சத்தின் அவலம்: புத்தகம் சுமக்க வேண்டிய பள்ளி மாணவிகள் தண்ணீர் சுமக்கும் பரிதாபம்

திருவண்ணாமலை:

மிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தமிழக அரசும், அமைச்சர்களும் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று ஒருபுறம் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில்,  மறுபுறம் அதிமுக அமைச்சர்கள் மழை வேண்டி யாகம் செய்யுங்கள் என்று இரட்டை மனநிலையில் பேசி வருகிறது.

இந்த நிலையில், தண்ணீர் பிரச்சினை காரணமாக பள்ளி மாணவிகளே பள்ளிக்கு தண்ணீர் சுமந்து செல்லும் அவலமான காட்சி புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைக்கண்ட பிறகாவது தமிழகஅரசு தண்ணீர் பிரச்சினை இருப்பதை ஒத்துக்கொள்ளும் என்று நம்புவோம்…

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் ஏரி குளங்கள் வறண்டு தண்ணீர் பிரச்சினை எழுந்துள்ளது. குடிநீர் ஆதாரங்களாக அமைந்துள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டதாலும் ஆக்கிரமிப்பு காரணமாகவும், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயலிழந்து,  குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. காலி குடங்களுடன் மக்கள் தண்ணீரை தேடி அலைகின்றனர்.

இந்த நிலையில், பள்ளிகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் படிப்பதற்கும், கழிவறையில் உபயோகப்படுத்தவும் தண்ணீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

பல தனியார் பள்ளிகள் தண்ணீர் பிரச்சினை காரணமாக அரைநாள் விடுமுறை கொடுத்து பள்ளிகளை நடத்திவரும் நிலையில்,  சென்னை உள்பட பல பள்ளிகளிலும் தண்ணீர் பிரச்சினை பூதாகாரமாக எழுந்துள்ளது.  ஆனால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ பள்ளிகளில் தண்ணீர் பிரச்சினையே கிடையாது என்று மறுத்து வருகிறார்.

ஆனால் பல அரசு பள்ளிகளில், குடி  தண்ணிருக்காக பள்ளிஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவி களையே வெளியே அனுப்பி  தண்ணீர் கொண்டுவரச் செய்கின்றனர்.

கல்வித்துறைக்கு தமிழக அரசு மட்டுமின்றி மத்திய அரசின் சர்வ சிக்சா அபியான் (SSA) திட்டம் மூலம் பலஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்மூலம் பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைற்ற முடியும். ஆனால் பல  பள்ளி தலைமையாசிரியர்கள் அந்த பணத்தை ஸ்வாகா செய்துவிட்டு பள்ளி மாணவ மாணவிகளையே  தண்ணீருக்காக தெருவில் அலைய விட்டுள்ள அவலம் நடைபெற்று வருகிறது…

ஆனால், தமிழக அரசு தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் பூஜை, புனஸ்காரம் என்று சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்தில் விநியோகிகப்பட்டு வரும் அம்மா தண்ணீர் பாட்டிலும் சமீப காலமாக விற்பனைக்கு வருவது குறைந்து உள்ளது. பல இடங்களில் அம்மா குடிதண்ணீர் பாட்டில்கள் விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, பெட்டிக்குப்பம் பகுதியில் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தில், நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் கூட அங்கிருந்து விநியோகம் செய்ய முடியவில்லை.

அதுபோல பல மாவட்டங்களில் செயல்பட்டு வந்த அம்மா குடிநீரும் ‘அதோகதி’யாகி விட்டது. ஆனால், தனியார் நிறுவன தண்ணீர் பாட்டில்கள் மட்டும் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இனிமேலாவது தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தண்ணீர் பிரச்சனையில் போர்க்கால நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published.