சென்னை,

சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் குறித்து அறிவிக்கப்படும் டிஸ்பிளே போர்ட்டில் நேற்று முதல் தமிழில் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இதுவரை  தமிழ், ஆங்கிலம், இந்தி என் 3 மொழிகளில் அறிவிப்பு பலகையில், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ் நீக்கப்பட்டு, இனி ஆங்கிலம், இந்தி என 2 இரண்டு மொழியில் மட்டும் அறிவிப்புகள் வெளியாகும் வகையில் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதற்கு தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. மத்திய அரசை வேண்டுமென்றே இந்தியை திணிக்கும் பொருட்டு தமிழை அகற்றி உள்ளது என்று விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். விமான நிலையத்தில் உள்ள டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே பிரச்சினை ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது என்றார். மேலும்,  ‘நானும் தமிழன்தான். டிஜிட்டல் பலகையிலிருந்து தமிழை நீக்கவில்லை’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.