திருவனந்தபுரம்:

பிரபல இணைய தள நிறுவனமான தமிழ்ராக்கெர்ஸ் இணைய தளத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி உள்பட 3 பேரையும், மற்றோரு இணையதள நிர்வாகிகள் 2 பேரையும் கேரள  ஆன்டி பைரசி செல் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தியேட்டரில் டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ள நிலையில், தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பவர்களை விட, திருட்டு விசீடியிலும், இணையத் தளத்தில் திரைப்படம் பார்ப்போரே அதிகமாக உள்ளார்கள். இதன் காரணமாக இணையதளம் மூலம் படங்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகின்றன பல இணையதளங்கள்.

இதன் காரணமாக பெரும்பாலான படங்கள் தியேட்டர்கள் ஓடாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.  இவ்வாறு படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருவதில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனம் தமிழ் ராக்கெர்ஸ்.

இதை முடக்க பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இணையதளத்தின் பெயரை மாற்றி படத்தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு சவால்விட்டு, திரைப்படங்களை ஆன்லைனில் அப்லோட் செய்து வருகிறது.

இதன் காரணமாக இந்த இணைய தளத்தின்ர் மீது  படத்தயாரிப்பாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இதுபோன்ற இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்றும், இணையதள நிர்வாகிகளை   கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இணையதள நிர்வாகிகள் படத்தயாரிப்பாளர்களுக்கு சவால் விட்டு புதிய படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், கேரளாவை சேர்ந்த திருட்டு சிடி எதிர்ப்பு பிரிவு போலீசார், தமிழ் ராக்கெர்ஸ் இணையதள முக்கிய நிர்வாகியான கார்த்தி என்பவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இவர் கம்ப்யூட்டர் அறிவியிலில் எம்.எஸ். பட்டம் பெற்றவர். இவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, விழுப்புரத்தை சேர்ந்த பிரபு, சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் டிவிடி ராக்கெர்ஸ் இணையதளத்தை நிர்வகித்து சகோதரர்களான வந்த ஜெகன் ஆகியோரும் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  தெரிவித்த கேரள ஆண்டி பைரசி செல் எஸ்பி பிரசாந்தன், புதிய படங்கள் தியேட்டரில் வெளியாகும் முன்பே இணைதளங்களில் வெளியாகி வந்தது குறித்து பல புகார்கள் வந்துள்ளதாகவும், இதுகுறித்து தங்களது திருட்டு விசிடி தடுப்பு பிரிவினர்  பல மாதங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்ததில் இணையதங்களை நிர்வகித்து வந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு டிவிடி ராக்கெர்ஸ் இணைய தளத்தில் ராமலீலா என்ற மலையாள படம் வெளியானது. அதுபோல மோகன்லாலின் புலிமுருகன் படம் தமிழ் ராக்கெர்ஸ் இணையதளத்தில் வெளியானது. இது குறித்த புகாரின் பேரிலும் வழக்கு பதியப்பட்டது. மேலும், தமிழ் ராக்கெர்ஸ்  இணையதளம் மீது  7 வழக்களுகுகள் ஏற்கனவே பதிவாகி இருந்ததாக தெரிவித்துள்ள அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இணையதளங்களை சேர்ந்த 5 பேர் மீதும்   காப்பி ரைட் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தற்போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் இணைந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில மாதங்களில் தமிழ் ராக்கெர்ஸ் நிர்வாகியான கார்த்தி, 1 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக பணம் சம்பாதித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகளும் பொறியியல் பட்டதாரிகள் என்றும், திருநெல்வேலியை சேர்ந்த ஜெகன், சுரேஷ் ஆகியோர் வேறு பல தொழில்கள் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

திரையுலகினருக்கு பெரும் நஷ்டத்தையும், கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தி வந்த தமிழ் ராக்கெர்ஸ் இணையதள நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது தமிழ் திரையுலகினருக்கு சற்று ஆறுதலை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.