மெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய உலக தமிழர்கள் சார்பில் ரூ. 3 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

மொய் விருந்து, சமூக வலைதளங்கள் மூலம்  மூலம் அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களிடம் இருந்து இந்த பணம் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலகின் பழைமையான மொழிகளுக்கெல்லாம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனித் துறை உள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு என இதுவரை தனித்துறை  இல்லை. தமிழுக்குத் தனித்துறையைத் தொடங்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் அறிஞர்களால் கோரிக்கை வைத்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு  வந்தது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை தொடங்க வேண்டும் என்றால்,  ரூ.42 கோடி வழங்க வேண்டும். இதில் ரூ. 21 கோடியை உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் அமெரிக்கவாழ் தமிழ் மக்களும் நிதியாக தந்து உதவி புரிந்துள்ளனர்.

மேலும் தேவைப்படும்  ரூ. 21 கோடியை வரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என ‘ஹார்வர்ட் தமிழ் இருக்கை’ அமைப்பின் தலைவரா ஜானகிராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடிகர் கமலஹாசன், தனது சார்பில் 20லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சார்பாக, 25 ஆயிரம் டாலர்கள் தருவதாக கூறி உள்ளார். மேலும், சேலம் திரிவேணி குழுமம் சார்பில் 1 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகக்கிராமங்களில் அவ்வப்போது மொய் விருந்து எனப்படும் விருந்து நிகழ்ச்சி நடைபெறுவது உண்டு.  திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காது குத்துதல் போன்ற  நிகழ்ச்சிகளில் பங்குபெற சொந்த பந்தங்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களுக்கு வயிறாற  விருந்தளித்து, அவர்களிடம் பணம் திரட்டுவதே இந்த மொய் விருந்தின் நோக்கம்.

தற்போது இந்த மொய் விருந்து, தொழில் தொடங்கவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க வாழ் தென்னக தமிழர்கள், மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் ரூ.3 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனக்டிக்ட், சீனா, ஹாங்காங், இலங்கை   போன்ற வெளிநாடுகளில் வாழ் தமிழ் அமைப்புகள், தமிழ் சங்கங்கள் தங்கள் அமைப்புகள் மூலம் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து மொய் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான இன்னிசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு நிதி வசூலிக்கப்பட்டது.

மேலும் சமூக வலைதளங்கள் மூலம் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அங்கு வாழ்ந்து வரும் தமிழக பொறியாளர் பிரவினா என்பவர் இந்த மொய் விருந்து நிகழ்ச்சியை முன்னி நடத்தி வருகிறார்.

இதன் காரணமாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.