Tamil speaker in Malaysian assembly traces her roots

 

அதிமுகவின் தற்போதைய குழப்பமான நிலைக்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே காரணம் என்று, மலேசிய பெரேக் மாகாணத்தின் சட்டசபை சபாநாயகரும், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான தங்கேஸ்வரி சுப்பையா தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தின் முக்கிய இடங்களைச் சுற்றிப்பார்க்க வந்திருந்த தங்கேஸ்வரி சுப்பையா, ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவி்த்துள்ளார். மலேசிய அரசியலில், நாற்பதாண்டு கால அனுபவத்தைக் கடந்திருக்கும் 68 வயதான தங்கேஸ்வரி, ஆரம்ப காலத்தில் ஆசிரியையாக தமது வாழ்க்கையைத் தொடங்கியவர். அடிப்படையில் அவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார்.

 

‘ஆசிரியாராக பணியாற்றிய போது, அதிகாரத்தில் உள்ள பல ஆண்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன். அதையே நான் தற்போது ஆண் உறுப்பினர்கள் அதிகமிருக்கும் சட்டசபையில் பின்பற்றி வருகிறேன்’ என்கிறார் தங்கேஸ்வரி.

 

தமிழகத்தின் தனிப்பெரும் அரசியல் ஆளுமையாக விளங்கிய ஜெயலலிதா, அந்த இடத்தை அடைவதற்காக கடுமையாக உழைத்தார் எனினும், இரண்டாம் கட்டத் தலைவர்களின் வளர்ச்சியை ஒரு போதும் அவர் அனுமதிக்கவில்லை என்கிறார் தங்கேஸ்வரி. கட்சியில் யாரையும் வளரவிடா விட்டால், அந்தக் கட்சி ஒருகட்டத்தில் அழிந்துவிடும் என்றும் தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். அதிமுகவின் தற்போதைய நிலைக்கு ஜெயலலிதாவே காரணம் என்பதை அவர் இவ்வாறு சூசகமாக சுட்டிக்காட்டி உள்ளார். இளையதலைமுறையினரிடம் அரசியல், சமூக பிரச்னைகள் குறித்த கவனம் அதிகரித்திருப்பது நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருந்தாலும், அது பொதுத்தளத்தில் பிரதிபலிப்பதற்கான தருணம் வாய்க்க வேண்டும் என்றும் தங்கேஸ்வரி கூறுகிறார்.

 

தமிழகத்தின் கிராமப்புறப் பெண்கள், சில அரசியல் தலைவர்களைக் கண்மூடித் தனமாக பின்பற்றுவதைப் பார்க்க முடிவதாகவும், கல்வி அறிவின்மையே அவர்களது இந்த நிலைக்குக் காரணம் என்றும் கூறுகிறார் தங்கேஸ்வரி சுப்பையா.

 

அரசியல், சமூக தளங்கள் குறித் தெளிவான பார்வையுள்ள மலேசிய அரசியல் ஆளுமையான தங்கேஸ்வரி சுப்பையா, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழகத்தில் வாழ்ந்தவரில்லை. இருப்பினும், தாம் ஒரு தமிழ்ப் பெண் என்ற பெருமிதம் அவருக்குள் ததும்பி வழிவதை, அவர் அளித்துள்ள பேட்டியில் உணரமுடிகிறது.

 

__________________________________________________________________________________________________________