டொரண்டோ, கனடா

னடா நாட்டின் டொரண்டோ நகரில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ரேச்சல் ஆல்பர்ட் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

கனடாவின் டொரண்டோ நகரில் யார்க் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.  இங்கு நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த ரேச்சல் ஆல்பர்ட் என்னும் 23 வயதுப் பெண்  முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.   இவர் கடந்த 22 ஆம் தேதி அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.  அப்போது அவரை அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் கத்தியால் பலமுறை குத்தியுள்ளார்.

படுகாயத்துடன் அதே இடத்தில் கிடந்த மாணவியை டொரண்டோ நகர காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.  அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   ரேச்சலை கத்தியால் குத்திய மர்ம நபரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ரேச்சலின் சகோதரி ரெபெக்கா, “எனது சகோதரி கனடாவில் உயிருக்குப் போராடி வருகிறார்.  அவருடைய கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதால் மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  அவரைக் காணக் கனடா செல்வ விசா கிடைப்பது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரிடம் டிவிட்டர் மூலமாக உதவி கோரி உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ரேச்சலின் குடும்பத்தினருக்கு டிவிட்டரில் அமைச்சர் ஜெய்சங்கர்,”கனடாவில் இந்திய மாணவி மீது நடந்த கொடூர தாக்குதல் அதிர்ச்சி அளித்துள்ளது.   அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு விசா பெற உதவ வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டுள்ளேன். “ என பதிலளித்து அவர்களுக்குத் தனது அலுவலக தொலைபேசி எண்களையும் தெரிவித்துள்ளார்.