“தமிழ் மாணவர்களை வதைக்கிறார் “நாம் தமிழர்” பிரமுகர் ஹூமாயூன்!”: கொதிக்கும் மாணவர்கள்

ஹூமாயூன்
ஹூமாயூன்

“தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லும் நாம் தமிழர் கட்சியின், பிரமுகர் “அன்னை பாலிடெக்னிக்” கல்லூரியின் தாளாளர் ஹூமாயூன். இவர் மாணவர்கள் பணத்தை ஏமாற்றுவதோடு, தட்டிக்கேட்ட மாணவர்களை சாதியைச் சொல்லி திட்டி கொலைவெறித்தாக்குதலும் நடத்தி இருக்கிறார்!” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் குடந்தை அருகில் இருக்கிறது  அன்னை கல்வி நிலயங்களின் ஒரு பிரிவான அன்னை பாலிடெக்னிக் கல்லூரி. இங்குதான்  தாளாளர் ஹூமாயூன் மீது கடுமையான புகார்களை தெரிவிக்கிறார்கள் மாணவர்கள்.  நாம் தமிழர் கட்சி பிரமுகரான இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் அக் கட்சியின் வேட்பாளராக பாபநாசம் தொகுதியில் நிறுத்தப்பட்டவர்.  ரஜினி ரசிகர் மன்ற பொறுப்புகளிலும் இருந்தவர்.

"நாம் தமிழர்" வேட்பாளராக ஹூமாயூன்
“நாம் தமிழர்” வேட்பாளராக ஹூமாயூன்

தற்போது  நடந்தது என்ன…?

தமிழ்நாடு மாணவர் இயக்கம் மையக்குழு உறுப்பினர் ஜீவபாரதி சொல்கிறார்:

“தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக அரசாணை எண் 92 வெளியிடப்பட்டது.  இது, “2011 -2012 ஆம் ஆண்டு முதல் சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளில் இலவசக் கட்டண இருக்கையில் பயிலும் ஆதிதிராவிடர்,பழங்குடியின மாணவ, மாணவியர் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை அரசே செலுத்தும் என்று சொல்கிறது.

ஜீவ பாரதி
ஜீவ பாரதி

மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது  பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் 2 இலட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் அக்கட்டணங்களை மைய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்க அரசால் ஆணையிடப்பட்டது.

ஆனால் அன்னை கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதியுள்ள தலித் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று அரசுக்கு அளிக்கிறார்  அன்னை கல்லூரி தாளாளர் ஹூமாயூன்.  அரசிடமிருந்து பணமும் பெற்றுவிடுகிறார்.  ஆனால், “அரசு பணம் வரவில்லை” என்று கூறி மாணவர்களிடமும் கட்டணத்தை வசூலிக்கிறார்.

அன்னை பாலிடெக்னிக்
அன்னை பாலிடெக்னிக்

இதனால் ஏழை தலித் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். “அரசிடமிருந்து எங்களுக்கான பணத்தை பெற்ற பிறகு, எங்களிடமும் ஏன் கட்டணம் கேட்கிறீர்கள். எங்களால் கட்ட முடியாத நிலை என்பதால்தானே அரசிடமிருந்து உதவி பெறுகிறோம்” என்று கேட்கும் மாணவர்களுக்கு தேர்வின் ஹால் டிக்கெட் தருவதில்லை. அந்த மாணவர்களை பரீட்சை எழுத விடாமல் செய்துவிடுகிறார் ஹூமாயூன். இதைத் தட்டிக்கேட்ட மாணவர்களை   கடந்த மாதம் 19ம் தேதி கடுமையாக தாக்கிவிட்டார் ஹூமாயூன்” என்றார்.

தாக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில்..
தாக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில்..

அந்த சம்பவத்தை சில மாணவர்கள் நம்மிடம் விரிவாகச் சொன்னார்கள்:

“ஹூமாயூன் பொறுப்பு வகிக்கும் அன்னைக்கல்வி நிறுவனங்களில் ஒன்று  அன்னை பாலிடெக்கனிக் கல்லூரி. இங்கு படிக்கும் நாங்கள், (தாழ்த்தப்பட்ட மாணவர்கள்)  அதிகமான கட்டணம் அதாவது மீண்டும் கட்டணம் வசூலிப்பது குறித்து தாளாளர் ஹூமாயூனிடம் கேட்டோம்.

அதற்கு பதில் சொல்லாத ஹூமாயூன், எங்களை சாதியைச் சொல்லி ஆபாசமாக திட்டியதுடன், எங்களை தாக்கவும் செய்தார். அது மட்டுமல்ல.. தன்னிடம் பணியாற்றும்   கொத்தனார் ஷண்முகம், எலக்டீசியன் மணி,  கான்டீன் மேனேஜர் தட்சிணாமூர்த்தி, ஓட்டுனர் சரவணன் ஆகியோரிடம், “இவனுங்களை அடிச்சுக்கொல்லுங்கடா” என்று உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் எங்களை கடுமையாக தாக்கினார்கள். நாங்கள் உயிர் பிழைக்க ஓடித் தப்பித்தோம்.

கடுமையான காயம்பட்ட  மாணவர்கள் பால அரங்கநாதன், வேந்தன், பிரசாத், கவியரசன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  ஆனால் எங்களில் சிலர் மீது பொய்வழக்கு போட்டிருக்கிறார் ஹூமாயூன்.

இப்போதும் அன்னை பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பயந்து பயந்துதான் கல்லூரிக்குச் சென்று வருகிறோம்” என்றார்கள் சோகத்துடன்.

மாணவர்கள் கோரிக்கை
மாணவர்கள் கோரிக்கை

இப்போது மாணவர் போராட்டம் மீண்டும் துவங்கியிருக்கிறது. தமிழ்நாடு மாணவர் இயக்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. இவர்களது கோரிக்கை, “மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ஹூமாயூன் விலக்கிக்கொள்ள வேண்டும். இவர் தமிழ் மாணவர்களின் வயிற்றில் அடித்து சம்பாதித்த பணத்தை அரசு பறிமுதல் செய்து, அன்னை கல்வி குழுமத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அன்னை கல்வி குழுமங்களில் நடந்த சந்தேக மரணங்களை முறையாக விசாரணை செய்ய வேண்டும். மாணவர்களை சாதி, மத ரீதியாக பிரித்து ஏசும் ஹூமாயூனை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்பதுதான்.

அன்னை கல்வி குழுமம், மற்றும் அதன் தாளாளர் ஹூமாயூன் மீதான புகார்கள் குறித்து அவர்களது தரப்பை அறிய ஹூமாயூன் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டோம்.

“பேசாம பேசாமத்தான் இருந்து…” என்ற பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவர் பேசவில்லை.

மாணவர்களின் குற்றச்சாட்டுக்கு  உள்ளாகியிருக்கும் அன்னை கல்வி குழும தாளாளர் ஹூமாயூன் தனது தரப்பை தெரிவிக்கும் பட்சத்தில் பிரசுக்க தயாராக இருக்கிறோம்.

  • டி.வி.எஸ். சோமு