நீட் தேர்வு குழறுபடிகளுக்கு தமிழ் மொழி பெயர்பாளர்களே காரணம் : சி பி எஸ் ஈ

டில்லி

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்டுள்ள குழறுபடிகளுக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர்களே காரணம் என  சி பி எஸ் ஈ தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சமீபத்தில் நீட் தேர்வு குறித்து தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.  அந்த தீர்ப்பில், “தமிழ் நீட் வினாத்தாளில் எக்கச்சமாக குழப்பங்கள் இருந்துள்ளன.  அதனால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 198  கருணை மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் “ என குறிப்பிட்டிருந்தது.

இதற்கு சி பி எஸ் ஈ உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.  அந்த மனுவில் சிபிஎஸ்ஈ, “நீட் தேர்வின் போது தமிழில் அளிக்கப்பட்ட வினாத்தாட்களில் மிகவும் குழறுபடிகள் உள்ளதாக கூறப்பட்டிருந்தன.   அதற்கு முழுக்காரணம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களே ஆவார்கள்.   தமிழக அரசு பரிந்துரை செய்த மொழி  பெயர்பாளர்கள்தான் நீட் வினாத்தாட்களை தமிழில் மொழி பெயர்த்தனர்.

அத்துடன்  தமிழில் நீட் தேர்வு எழுதிய அனைவருக்கும் 198 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்க உத்தரவிட்டது தவறானது.  உதாரணமாக ஒரு மாணவர் 552 மதிப்பெண் பெற்றிருந்தால் அவருக்கு கருணை மதிப்பெண்ணுடன் சேர்ந்து மதிப்பெண் 750 ஆகிறது.   ஆனால் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த மதிப்பெண் 720 தான் என்னும் நிலையில் இது சாத்தியமே இல்லை.   இதனால் வீண் குழப்பங்கள் அதிகரிக்கும்” என குறிப்பிட்டுள்ளது.