திருவனந்தபுரம்:

விபத்தில் காயமடைந்த தமிழக நபருக்கு கேரள மருத்துவமனைகள்  சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரத்தில் கேரள அரசு தனது நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கைது நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி, சமீபத்தில் கொல்லம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆனால், அவருக்கு, சிகிச்சை வழங்க, கொல்லம், திருவனந்த புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.

ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின், அவர் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

தகவல் கிடைத்ததும் பதறியடித்தபடி அவரின் மனைவி பாப்பா மற்றும் குடும்பத்தினர் கொல்லம் சென்று பின்னர் அங்கிருந்து  திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி சென்று உடலை பெற்றனர். ஆனால், உடலை சொந்த ஊருக்கு எடுத்துவர பணம் இல்லாததை அறிந்த  திருவனந்தபுரம் மாவட்டம் சி.பி.எம். கட்சி ரூ. 10 ஆயிரம் வழங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரூ.10 ஆயிரம் வழங்கினர். முருகனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுசெல்ல வாகன வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தனர்

கேரள மருத்துவமனைகள்,  இப்படிச் செய்ததன் மூலமாக, மிகப் பெரிய களங்கத்தை கேரளாவுக்கு ஏற்படுத்திவிட்டன. இது மிகக் கொடூரமான செயல். எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க, சட்ட ரீதியாக, சில திருத்தங்களை அமல்படுத்துவோம் என்றும், இதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும்  கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரள முதல்வர் விபத்தில் சிக்கி, சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்த முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியும்,முருகன் குடும்பத்தாரை நேரில் வரவழைத்து ஆறுதல் கூறினார்.

அதைத்தொடர்ந்து தமிழக முதல்வரும், தமிழக அரசு சார்பாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.

இந்த விஷயத்தில், கேரளா அரசு தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. இறந்த முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களை கைது செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக,  குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.