சென்னை: வரும் ஏப்ரல் மாதம் ரஜினி காந்த் கட்சி தொடங்குகிறார்.  அவரது கட்சி கூட்டணியில் பாமக இணைகிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழருவி மணியன்.

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, ஒரு வருடத்திற்கு முன்பு ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் முதல் பொதுக் கூட்டத்தை அவர் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி அறிவித்திருந்தாலும் திமுகவை சமாளிக்க மெகா கூட்டணியை அமைக்க அவர் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பிரபல சொற்பொழிவாளரும் காந்திய மக்கள் கட்சி தலைவருமான தமிழருவி மணியன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர்  கூறியுள்ளதாவது : வரும் ஏப்ரல் மாதம் ரஜினி காந்த் கட்சி தொடங்குகிறார். அதற்கென பிரமாண்ட மாநாடு நடத்தவுள்ளதாகவும், செப்டம்பர் மாதம் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியுடன் பாமக இணையும். பாஜகவுடன் இணைவது பற்றி அவர்தான் முடிவு செய்வார் என்றார். சமீபத்தில் ரஜினி சிஏஏவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் அவர் பாஜகவுடன் கைகோர்க்கிறார், அந்த கட்சியுடன் கூட்டணி சேருவார் என்று தகவல்கள் வருகிறது.

அதேசமயம் பாஜக தலைவர்கள் ரஜினிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், பெரியார் குறித்து சர்சைக்குரிய கருத்துக்கும், சிஏஏ ஆதரவு தெரிவித்த ரஜினிக்கு எதிரான எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.