Random image

தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் வீட்டிற்கு சென்று மன்னிப்பு கோரினார்: ஸ்டாலின் பாணியில் தமிழிசை

சென்னை:

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய வயதான ஆட்டோ டிரைவர் பாஜகவினரால் கடுமையாக தாக்கப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலுக்கு ஆளான ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து ஆறுதல் கூறி மன்னிப்பு கோரினார் தமிழிசை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது, பிரியாணி கேட்டு திமுகவினர் கடை ஊழியர்களை தாக்கிய விவகாரம் குறித்த வீடியோ வைரலாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பிரியாணி கடை ஊழியர்களை, சம்பந்தப்பட்ட கடைக்கே சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார்.

தற்போது, தமிழக பாஜக தலைவர் தமிழிசையும், ஸ்டாலின் பாணியில் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு சென்று சமாதானப்படுத்தி அவர்கள் குடும்பத்தினருக்கு சுவிட் கொடுத்து மன்னிப்பு கோரி  உள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு பின்புறம் இருந்து  வயதான ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் டீசல் விலை தினமும் உயருகிறதே என்று தமிழிசையை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழிசை பதில் எதுவும் தெரிவிக்காமல் தனது பாணியிலேயே செய்தியாளர்களை சந்தித்து வந்தார்.

ஆட்டோ ஓட்டுனரிடம் மன்னிப்பு கோரிய தமிழிசை

ஆனால், அவருடன் வந்திருந்த பாஜகவினர், கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். இதை தமிழிசை கண்டும் காணாததுமாய்  அங்கிருந்து கிளம்பினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் வீட்டுக்கு இன்று மதியம் சென்ற தமிழிசை, அவரிடம் பாஜகவினர் தாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அது தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழிசை பதிவிட்டு உள்ளார்.