புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று புதுச்சேரி மாநில ஆளுநராக பதவி ஏற்கிறார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசுக்கும், முன்னாள் ஆளுநகர் கிரண்பேடிக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக அதிகார மோதல் நீடித்து வந்தது.  புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால், ஆளுநரின் நடவடிக்கை காரணமாக பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி, திடீரென ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கிரண்பேடி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன்,  தெலங்கானா ஆளுநராக பொறுப்பில் இருந்து வரும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நிலையில்  புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநகராக  தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்று, தனது பணியை தொடங்க உள்ளார். இன்று காலை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.