இதுதான் டிஜிட்டல் இந்தியா: தமிழகம், கேரளாவில் 544 ரயில் நிலையங்களில் அதிவேக இலவச வைபை

சென்னை: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடிப்படையில், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள 544 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி கிடைக்க போகிறது.

நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

5,000 ரயில்நிலையங்கள் இந்த வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டமானது, டாடா குழுவமம், கூகுள், ரயில்டெல் ஆகியவற்றின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன் ஒரு  அங்கமாக, முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக, அதிவேக வைபை இணையவசதியை ஏற்படுத்தி தருகிறது. இந்த வசதியை தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள 544 ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இந்த இரு மாநிலங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் வைபை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். படிப்படியாக, கிராம பகுதிகள் வழியே செல்லும் ரயில் நிலையங்களிலும் இந்த வசதி செய்து தரப்பட உள்ளது.

முன்னதாக, 2019ம் ஆண்டில் 282 ரயில்நிலையங்களில் மட்டுமே இலவச இணையவசதி ஏற்படுத்தித் தருவது என்று மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அது தற்போது, 544 ரயில்நிலையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து கொண்டு அதிவேக இலவச இணையவசதியை பெறலாம். அதற்காக, ரயில்வே நெட்வொர்க்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, 10 இலக்க மொபைல் எண்ணை தந்து, ஒரு முறை பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை பெற்று வைபை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.