சென்னை:

மிழகம் கேரளா இடையே உள்ள நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில்  சென்னையில் இரு மாநில அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழகம் – கேரளா இடையே  முல்லைப்பெரியாறு அணை உள்பட பல நதிநீர் பிரச்சினைகள் நீண்டகாலமாக  நீடித்து வருகிறது. இதுதொடர்பாக  தமிழக முதல்வர் திருவனந்தபுரம் சென்று கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். 15ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு மாநிலங்கள் தரப்பிலும் தலைமைச் செயலாளர் தலைமையில்  தலா 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இவர்கள்  ஆண்டுக்கு  2 முறை  சந்தித்து ஆலோசிப்பர் என்றும் கூறப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக,  தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதாரத்துறை செயலாளர் அசோக் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் இன்று முதன்முறையாக சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.  இன்று நடைபெறும் முதல் கூட்டத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு நீர்திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக  கூறப்படுகிறது. மேலும் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நடைபெறவுள்ள கூட்டங்களில், பாண்டியாறு – புன்னம்புழா, நீராறு – நல்லாறு திட்டம், நெய்யாறு திட்டம், செண்பகவள்ளி நீர்வழிப்பாதை சீரமைப்பு என பல்வேறு திட்டங்கள் மற்றும் நீர்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

2வது கட்ட பேச்சுவார்த்தை கேரளாவில் விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.