ஒலிம்பிக் பதக்க கனவுகளுடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பெண் ரேவதி..!

மதுரை: ஒலிம்பிக் பதக்க கனவுடன் கடினமாக உழைத்துவரும் தமிழ்நாட்டின் தடகள வீராங்கனை ரேவதியின் கதை கேட்பதற்கு ஆச்சர்யகரமானது!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ள சூழலில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அவர்.

தற்போது 22 வயதாகும் ரேவதி, 400 மீட்டர்கள் மற்றும் ரிலே ஓட்டங்களில், பல தேசிய மற்றும் பல்கலைக்கழக சாதனைகளை முறியடித்தவர். தற்போதைய நிலையில், 2021ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வகையில், பயிற்சி பெறுவதற்காக நாடெங்கிலுமிருந்து தேர்வுசெய்யப்பட்டுள்ள 8 நபர்கள் குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வகையில் தான் உறுதியாக தேர்வுசெய்யப்படுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ரேவதி. இவர், ஏற்கனவே பல சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.

சக்கிமங்களம் என்று சிற்றூரைச் சேர்ந்த ரேவதி, ஆரம்பநிலை கல்வியைத் தாண்டுவதற்கு தனது தாய் & தந்தை ஆகிய இருவரையும் இழந்தார். அதுமுதல், அரசு விடுதிகளிலேயே தங்கிப் படித்தார் ரேவதி. தனது உடற்பயிற்சி ஆசிரியரின் தூண்டுதலால் கடினப் பயிற்சியை மேற்கொண்டு, விளையாட்டு கோட்டாவிலேயே படித்து, இன்று இந்த பாராட்டுக்குரிய நிலையை அடைந்துள்ளார்!

அந்த ஏழை இளம் தமிழ்ப் பெண்ணின் ஒலிம்பிக் பங்கேற்பு மற்றும் பதக்க கனவு நிறைவேற நாமும் மனதார வாழ்த்துவோம்..!