Random image

அமித்ஷா நிகழ்ச்சியில் பங்கேற்க ஆதார் தர வேண்டுமா? தமிழக ஊடகத்துறையினர் அதிர்ச்சி

சென்னை:

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வரும் 9ந்தேதி தமிழகம் வருகிறார். இதையொட்டி தமிழக பாஜக தலைவமை பல்வேறு அதிரடி நிகழ்ச்சி  ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அமித்ஷா வருகையையொட்டி, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் செய்தியாளர்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக பாஜக விதித்துள்ளது.

ஊடகத்துறையினருக்கு தமிழக பாஜ அளித்துள்ள அனுமதி படிவம்

இதுகுறித்து தமிழக பாரதியஜனதா கட்சி சார்பில், ஒரு படிவம் கொடுக்கப்பட்டு, அதை நிரப்பி தர வலியுறுத்தப்பட்டு உள்ளது. அந்த படிவத்தில்  நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் தங்களது புகைப்படம், அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் ஐடி கார்டுடன், ஆதார் அட்டையின் நகலையும் கேட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரோ போன்ற மத்திய அரசின் முக்கிய நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஊடகத்துறையை சேர்ந்தவர்களிடம் மட்டுமே இதுபோன்ற தகவல்கள் சேகரிக்கப்படும் நிலை யில், ஒரு கட்சியின் தலைவரின் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆதார் தகவல்களை கேட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதி மன்றமே தனிநபர் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள ஆதார் கார்டை,  ஒருசில அரசு சேவை திட்டங்களை தவிர மற்ற திட்டங்களுக்கு  கேட்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கும்  நிலையில்,  பாஜக தலைவரான அமித்ஷா நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆதார் தகவல்களை தமிழக பாஜ கேட்டிருப்பது, தமிழக செய்தியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கட்சியின் தலைவரான அமித்ஷா நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆதார் தகவல்களை கொடுக்க வேண்டுமா? அப்படி நிகழ்ச்சியில் ஊடகத்துறையினர் பங்கேற்க வேண்டுமா?  என்பது குறித்து தமிழக ஊடகத்துறைகளை சேர்ந்த சங்க அமைப்புகளும், செய்தியாளர்களும் விவாதித்து வருகின்றனர்.

தமிழக பாஜ தலைமையின் இந்த அடாவடி தகவல் தமிழக செய்தியாளர்கள் மட்டத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமித்ஷா நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே அமித்ஷா நாடு முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வந்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இதுவரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள வில்லை.

கடந்த ஆண்டு இரண்டுமுறை தமிழக சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு விட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு பிரச்சினை கிளம்பி உள்ளது.

இந்த முறையாவது அமித்ஷாவின் தமிழக பயணம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

You may have missed