சென்னை:

2020-2021க்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14ந்தேதி  தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், வரும் நிதியாண்டுக்கான (2020-2021) தமிழக நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்யவுள்ளாா்.

இதுகுறித்து, தமிழக சட்டப்பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 14-ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவா் ப.தனபால் கூட்டியுள்ளாா். அன்றைய தினம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமென்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, 2020-2021-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் சீனிவாசன் தெரிவித்துள்ளாா். இந்த அறிவிப்பானது அனைத்து அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி 10ந்தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய திட்டங்கள்  குறித்து முதல்வா் பழனிசாமி கடந்த வாரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.