சேலம்:

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்காக தீவிர  பரப்புரை யில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் இன்று சேலத்தில் சுற்றுப்பயணம்செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அங்கு மக்களிடையே பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் தற்போதுள்ள அமைச்சரவை, கிரிமினல் கேபினட் (அமைச்சரவை) என்றும்,  தெர்மோகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது போன்றவைதான் அதிமுக ஆட்சியின் சாதனைகள் என்று கடுமையாக சாடினார்.

கடநத 20ந்தேதி திருவாரூரில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் இன்று 3வது நாளாக  சேலத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, சேலம் தொகுதி  திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொது மக்களிடையே பேசிய ஸ்டாலின், மத்தியில் பாஜக அரசு மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு, கோபம் எல்லாவற்றையும் மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியவர்,  திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதையும் மக்களின் எழுச்சி காட்டுவதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சியின்போது, சேலம் மாவட்டத்துக்கு ஏராளமான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்று கூறியவர், தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து வருபவர்கள் கிரிமினல்கள் என்று குற்றம் சாட்டினார்.

கொடநாட்டில் கொள்ளை- கொலை, குட்கா மாமூல், கம்பராமாயணத்தை சேக்கிழார் , தெர்மோ கோல் விஞ்ஞானம் போன்றவைதான் அதிமுக ஆட்சியின் சாதனைகள் என்றவர்,  தமிழகத்தில் அமைந்திருப்பது கிரிமினல் கேபினட் என கடுமையாக சாடினார்.

ஸ்டாலின் பேச்சு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.