24ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

மிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் டிசம்பர்  24ம் தேதி  நடக்க இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும், மேகதாது அணை விவகாரம் பூதாகரமெடுத்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில்  இரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என அந்த ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதற்கான  ஆயத்தப் பணிகளில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.  ஆகவே ஸ்டெர்லைட் ஆலை பற்றி கொள்கை முடிவு எடுக்க எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

அதே போல கர்நாடக அரசு காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில்   ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதில் தீவிரமாக இருக்கிறது. தற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்துள்ள அம்மாநில அரசு, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியிருந்தது. கர்நாடக அரசு அனுப்பியிருக்கும் அறிக்கையை நீர்வளத்துறை பரிசீலிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். ஆனால். மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டது.

இந்த இரண்டு விசயங்களும் தமிழக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகின்றன. இந்த விவகாரங்களில் தமிழக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் டிசம்பர் 24-ம் தேதி பகல் 12 மணிக்கு கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இக் கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் மற்றும் மேகதாது அணை  உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இக் கூட்டத்தில் ஸ்டெர்லைட், மேகதாது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆகவே இந்த அமைச்சரவை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.