வரும் 19ம் தேதி அமைச்சரவை கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல், அரசின் திட்டங்கள் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை மறுநாள் (நவ.19ம் தேதி) அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

அன்றைய தினம், காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தத்திற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும், இந்த கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


பல துறைகள் குறித்த கொள்கை ரீதியான பல்வேறு முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு திட்டங்கள் செயலாக்கம் பற்றியும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

வெளிநாடு சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை இரவு சென்னை வருகிறார்.
உள்ளாட்சி தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் காணப்படுகிறது. இந்த தருணத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.