‘நீட் தேர்வு’ தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது! மத்திய அமைச்சர் நட்டா

--

டில்லி,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த மாதம் 7ந்தேதி தேர்வு நடைபெற உள்ளதால் நீட் தேர்வு நடைபெற உள்ளதால், தமிழக மாணவர்கள்  மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

நீட் தேர்வு குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரினர்.

ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை மத்தியஅரசு நிராகரித்து விட்டது. தமிழகத்திலும் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்தின் அரசு மருத்துவம் மற்றும் பல மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு பெற சட்ட மசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறை வேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மசோதாவில் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றுதர மத்திய அரசு மறுத்து விட்டது.

இதன் காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு மூலமே மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாமல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை இதுவரை நடைபெற்று வந்தது. . இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவபடிப்பில் சேர முடிந்தது.

ஆனால் நீட் தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால் தமிழகத்திற்கு பெருத்த பாதிப்பு ஏற்படும்.