காப்பான் திரைப்படத்தில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் குறித்து பேசியதற்காக நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் சூர்யா, சயீஷா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரகணி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான காப்பான் திரைப்படத்தில், முதல் பகுதியில் மோகன்லாலின் மறைவுக்கு பின்னர் ஆர்யா நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். அப்போது பிரபல தொழிலதிபர் ஒருவரின் நிறுவனம் தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரியாவு உட்பட பல்வேறு சுரங்கங்களை அமைத்திருப்பதாகவும், அதை மூட ஆர்யா உத்தரவிட உள்ளதாகவும் அரசு கூட்டத்தில் கூடி முடிவெடுக்கப்படுகிறது. இது தொடர்பான தகவல் அத்தொழிலதிபருக்கு கிடைக்கவே, பிரதமர் ஆர்யாவின் வீடு தேடி வந்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, தன்னுடனேயே இருக்கும் தஞ்சை விவசாயி ஒருவர் பேசுவார் என்று கூறி சூர்யாவை அத்தொழிலதிபருக்கு ஆர்யா அறிமுகப்படுத்த, விவசாயிகளை பற்றி அவதூறாக தொழிதபர் பேசுவது போல அக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி தரும் சூர்யா, விவசாயிகளின் போராட்டம் மற்றும் துயரங்களை எடுத்துக்கூறும் வசனங்கள் கொண்ட காட்சியும் அடுத்தடுத்து இடம்பெற்றிருந்தது. இக்காட்சிக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பற்றி உயர்வாகவும், அவர்களின் துயரங்கள் பற்றி பேசியதற்காகவும் நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு, சூர்யாவை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.